விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்ற திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இதுவரை சேராதவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சேர்ந்து மொத்தமாக ரூ. 4000 வரை பலன் பெறலாம்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் திட்டமாகும். இந்த உதவித் தொகையை விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெறலாம். இந்த தொகை மூன்று சமமான தவணைகளாக விவசாயிகளுக்கு பரிமாற்றம் செய்யப்படும். இதுவரை 9 வது தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் 9 வது தவணையை, ஆகஸ்ட் 9 அன்று பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்காக வெளியிட்டார். ரூ. 19,500 கோடிக்கு மேலான தொகை 9.75 கோடிக்கும் மேற்பட்ட இத்திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தில் பலனடைய தகுதியான விவசாயிகள் இன்னும் நிறைய பேர் சேராமல் உள்ளனர். அவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இணைந்தால், அவர்களுக்கு மொத்தமாக ரூ.4000 கிடைக்கும்.
ஏற்கனவே திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் சிலருக்கு உதவித் தொகை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அவர்களுக்கு நவம்பர் மாதத்தில் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்தால், நவம்பர் மாதத்தில் ஒரு தவணையும், டிசம்பர் மாதத்தில் அடுத்த தவணையும் கிடைக்கும். இதன் மூலம் மொத்தமாக ரூ. 4000 கிடைக்கப்பெறும்.
இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்த விவசாயிகள் சிலருக்கு இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை என்ற புகார் வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கு, ஆதார், மொபைல் எண் போன்றவற்றில் பிரச்சினை இருக்கலாம். இதனால் உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம். இதனை சரிசெய்ய பிஎம் கிசான் வலைதளத்தில் சென்று பிழைகளைத் திருத்தினால் உதவித் தொகை சரியாகக் கிடைக்கும். எனவே https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தகவல்களை சரி செய்துக் கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil