செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைக்காக மத்திய அரசு ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ என்னும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
பிறந்த பெண் குழந்தைகள் முதல் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் நிலையத்தில் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தில் ஒருவர், அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்யலாம்.
கணக்கை தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள்
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் நிலையத்தில் சுகன்யா சம்ரிதி கணக்கு படிவம் (எஸ்.எஸ்.ஏ-1) கிடைக்கும்.
கணக்கை தொடங்குபவர், குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் KYC தகவல்களுடன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரிக்கான ஆவணம் – பாஸ்போர்ட், ஒட்டுநர் உரிமம், ரேசன் கார்டு மற்றும் மின்கட்டண ரசீது போன்றவை.
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் – பாஸ்போர்ட், ஆதார் அல்லது பான் கார்டு
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
- வங்கி கணக்கு புத்தகம்
- கட்டணம் செலுத்திய ரசீது
உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கபட்ட பின்னர் கணக்கு திறக்கப்படும். மேலும் உங்களுக்கு ஒரு பாஸ்புக் வழங்கப்படும்.
சேமிப்பு தொகை எவ்வளவு?
இதில் குறைந்தபட்சமாக ஆண்டிற்கு ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களின் பெண் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக அவர் 10 ஆம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது ஆகும்போது ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். பெண் குழந்தை 18 வயதை பூர்த்தி செய்தவுடன், விரும்பினால் முழுத்தொகையையும் திரும்பப் பெறலாம்.
வட்டிவிகிதம் எவ்வளவு?
அரசாங்க சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி விகிதத்தை கொண்ட திட்டம் இது. இத்திட்டத்திற்கான வட்டிவிகிதம் ஒவ்வொரு காலாண்டுக்குமாக திருத்தப்பட்டு தற்போது ஆண்டுக்கு 7.60 சதவீதமாக உள்ளது.
வரிச்சலுகைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்களுடன் சுகன்யா சம்ரிதி திட்டம் பெற்றோரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.. மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு வரிச்சலுகை உண்டு. பிரிவு 80 சி இன் கீழ் வரிச்சலுகையை பெறுகிறது
முதிர்வுத்தொகையை கணக்கிடுவது எப்படி?
ஒரு பெண் 21 வயதை நிறைவு செய்யும் போது முதிர்ச்சியடைகிறது. அப்பொழுது மூன்று மடங்கு தொகை உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் திட்டத்தில் டெபாசிட் செய்ய விரும்பும் தொகையுடன் உங்கள் மகளின் வயதையும் வழங்க வேண்டும். நீங்கள் திட்டத்தில் டெபாசிட் செய்த தொகையை பொறுத்து உங்கள் மகளின் முதிர்ச்சி தொகை கணக்கிடப்படுகிறது.
கணக்கை திறந்த நாளிலிருந்து 15 வருடங்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 15 வருடங்களுக்கு பிறகு நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு வட்டி கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil