/indian-express-tamil/media/media_files/2025/05/14/8Nuu49bfhxxH3PC20bB2.jpg)
பி.பி.எஃப் திட்டத்தில் ரூ.1 கோடி வரை சேமிக்கலாம்... அதுக்கு இந்த டிப்ஸ்களை நோட் பண்ணுங்க மக்களே!
இன்றைய காலகட்டத்தில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. ஏனெனில் 100% பாதுகாப்பு உண்டு. கணிசமான வருவாய் உண்டு. நிறைய சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும்? அதன் மூலம் குழந்தைகளின் வருங்காலத்தில் எந்த பிரச்னையும் இருக்க கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக லாபம் ஓரளவு அதிகம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், எதில் சேமிக்கலாம், எது பாதுகாப்பானது? எது லாபகரமானது? என்பதில்தான் குழப்பமே. இதுதான் பலருக்கும் பிரச்னையே. நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை பெற, அரசின் சிறுசேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம். எனக்கு 1 கோடி ரூபாய் வேண்டும். அதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்றால், வாருங்கள் பார்க்கலாம்.
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி:
அரசின் திட்டங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது வரப்பிரசாதம்தான். ஏனெனில் முதலீட்டிற்கு பிரச்னை இல்லாத சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதில் 7.1% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒருவரால் ஒவ்வொரு மாதமும் அதிகப் பணத்தை சேமிக்க முடியாவிட்டாலும் குறைந்த அளவிலான பணத்தையாவது முதலீடு செய்ய முடியும். மேலும், இந்தத் திட்டத்தில் மாதம் ரூ. 500ல் முதலீட்டில் இணையலாம். இத்தகைய சிறிய தொகையிலான மாதாந்திர முதலீட்டுத் திட்டங்கள் சில ஆண்டுகளில் உங்களுக்கு லட்சக்கணக்கான தொகையை பெற உதவும். இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருடம் தொடரலாம் என்பதால், இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.
ரூ.1 கோடி சேமிப்பது எப்படி?
பி.பி.எஃப் திட்டத்தில், 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12500 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். அந்த வகையில், இந்த திட்டத்தை தலா 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டித்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.1.03 கோடி கிடைக்கும். இதில் உங்கள் மொத்த முதலீடு ரூ.37.50 லட்சமாக இருக்கும். அதேசமயம் வட்டியில் இருந்து ரூ.65.58 லட்சம் கிடைக்கும். நீங்கள் முதிர்வு காலத்தை நீட்டிக்க விரும்பினால், அதை 1 வருடத்திற்கு முன்பே உங்கள் வங்கி அல்லது அஞ்சலக கிளைக்கு தெரிவிக்க வேண்டும்.
வரி விலக்கு:
பி.பி.எஃப் திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், கணக்கு வைத்திருப்பவர் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுகிறார். கணக்கு வைத்திருப்பவர்கள் பிபிஎஃப் முதலீடுகளில் ரூ.1.5 லட்சம்வரை தள்ளுபடி பெறலாம். பிபிஎஃப் திட்டத்தில் பெறப்பட்ட வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
எப்படி இந்த கணக்கை தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.
இடையில் பணம் எடுக்கலாமா?
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். உதாரணத்திற்கு ஜனவரி 1, 2012ல் தொடங்கியிருந்தால் 2018 -19ம் நிதியாண்டில் இருந்து திரும்ப பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
நன்றி: Boss Wallah (Tamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.