/indian-express-tamil/media/media_files/2025/06/21/beekeeping-process-2025-06-21-12-31-17.jpg)
தேனீ வளர்ப்பு முறை
முனைவர் வித்யாஸ்ரீ, "ஃபியூச்சர் நேச்சர்" என்ற தேனீ வளர்ப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தனது ஆர்வத்தை வெற்றிகரமான தொழிலாக அவர் மாற்றியுள்ளார். அவர், தனது தோட்டத்திலிருந்த ஒரு சிறிய மரப்பெட்டியுடன் தேனீ வளர்ப்பைத் தொடங்கினார். இப்போது மற்றவர்களும் இந்த தொழிலில் ஈடுபடும் அளவிற்கு ஆலோசனைகள் மற்றும் உபகரணங்களை அவர் வழங்குகிறார். அதன்படி, தனது பயணம் குறித்து பிஸ்னஸ் தமிழா என்ற யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்து கொண்டார்.
தேனீ வளர்ப்பில் பயணம்: வித்யாஸ்ரீ, தனது இரண்டாம் ஆண்டு கல்லூரி காலத்தில் கரிம விவசாயத்தை ஆராயும் போது தேனீ வளர்ப்பைத் தொடங்கினார். தேனீக்கள் அழிந்துவிட்டால், உலகம் மூன்று ஆண்டுகளில் அழிந்துவிடும் என்ற கூற்றால் ஈர்க்கப்பட்டார். ஐந்து பெட்டிகளுடன் இந்த தொழிலை அவர் தொடங்கினார். ஆனால், அவை பூச்சிக்கொல்லிகளால் அழிக்கப்பட்டன. பின்னர், வேலை வாய்ப்புகள் இருந்தும், தேனீ வளர்ப்பைத் தொடர வித்யாஸ்ரீ முடிவு செய்தார். இப்போது 400 முதல் 500 பெட்டிகளை நிர்வகிக்கிறார்.
தொழில் வளர்ச்சி மற்றும் வருவாய்: ஆரம்பத்தில் மாதம் 5,000 ரூபாயை வித்யாஸ்ரீ சம்பாதித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இது 25,000-30,000 ரூபாயாக அதிகரித்தது. உச்ச பருவத்தில் வருவாய் லட்சக்கணக்கில் இருக்கும். ஆஃப்-சீசனில் 60,000 முதல் 1, 00,000 ரூபாய் வரை இருக்கும். கோவிட் தொற்றுக்கு பிறகு தேனுக்கான தேவை அதிகரித்தது.
தேனீ வளர்ப்பு செயல்முறை மற்றும் தேன் பிரித்தெடுத்தல்: தேனீக்கள் கொட்டாமல் இருக்க மெதுவாக கையாளப்படுகின்றன. இதில், ராணி தேனீக்கள் அடையாளம் காணப்படுகின்றன. தேன் செல்கள் மூடப்பட்டிருக்கும் போது மட்டுமே தேன் எடுக்கப்படுகிறது. தேன் எடுக்க ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சட்டகத்தில் இருந்து சுமார் 150-200 கிராம் தேன் எடுக்கலாம் .
பராமரிப்பு மற்றும் சவால்கள்: பல்லிகள், குளவிகள் மற்றும் எறும்புகள் தேனீக்களின் எதிரிகள் ஆகும். தேன் கூடுகளை, சரியான நேரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். போதுமான பூக்கள் இருந்தால் மாதம் தோறும் தேன் சேகரிக்கலாம். வணிக ரீதியான தேனீ வளர்ப்புக்கு பெட்டிகளை வாழை அல்லது முருங்கைத் தோப்புகளுக்கு மாற்ற வேண்டும். தேனின் தரம், நிறம், சுவை, அடர்த்தி ஆகியவை பூக்களைப் பொறுத்து மாறுபடும். தேனை நீண்ட நேரம் சேமிக்க ஈஸ்ட் நீக்கப்பட வேண்டும். இந்த தொழிலில் வானிலை போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
தயாரிப்புகள் மற்றும் சேவைகள்: இவரது நிறுவனம் தற்போது, உபகரணங்கள் மற்றும் பயிற்சியுடன் தேனீ பெட்டிகளை வழங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும், விவசாய நிலங்களுக்கு மகரந்தச் சேர்க்கை சேவைகளை வழங்குகிறது. தேன் விற்பனை செய்வதில் சிரமம் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து தேனை திரும்ப வாங்குகிறார்கள். ஒரு தேனீ பெட்டியின் விலை 2,300 முதல் 2,500 ரூபாய் வரை இருக்கும். இதற்கான, உபகரணங்கள் சுமார் 1,700 ரூபாய் இருக்கக் கூடும். தேனீ வளர்ப்பை பகுதி நேரமாக கூட செய்யலாம். தேன் தவிர, புரோபோலிஸ், ராயல் ஜெல்லி மற்றும் மகரந்தம் போன்றவையும் உற்பத்தி செய்யலாம். இவற்றுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது.
முதலீடு மற்றும் வருமானம்: ஐந்து பெட்டிகளுடன் தொடங்க சுமார் 15,000 ரூபாய் முதலீடு தேவைப்படும். இவற்றுடன் மாதம் குறைந்தபட்சம் 4,000 ரூபாய் வருமானம் ஈட்டலாம் என்று கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.