தங்க நகைக் கடன் தொடர்பாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை விதித்தது. குறிப்பாக, கடன் மதிப்பு விகிதம் 75 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, உங்கள் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் அடமானம் வைக்க எடுத்துச் செல்லும் நகை, நம்முடையது தான் என்று நிரூபிக்கும் வகையில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், நாம் அடமானம் வைக்கும் தங்கத்தின் தூய்மைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்று பலரும் கூறுகின்றனர்.
மேலும், வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து கொடுக்கப்படும் நகைக் கடன் ஒப்பந்தம் தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதில், நகை வாங்கிய விவரம், அதன் எடை உள்ளிட்ட தகவல்கள், கடனை செலுத்த தவறினால் அதனை ஏலத்தில் விடப்படும் நடைமுறைகள் போன்ற அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிலையில், தங்க நகைகளை மொத்தமாக ஒரு ஆண்டுக்குள் அதன் வட்டி மற்றும் அசல் தொகை வரை செலுத்தி திருப்ப வேண்டும் எனவும், அந்த ஆண்டின் முடிவில் மீண்டும் அடகு வைக்க வேண்டுமென்றால், மொத்தமாக திருப்பிய பின்னர் தான் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தங்க நகைகளை அடகு வைத்த நபர் அதனை மீட்காதபட்சத்தில், ஏலம் விடும்போது முறையாக ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டிருந்தார்.
வங்கிகளில் பொதுவாக நகையை ஏலம் விடும் போது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், சில நிதி நிறுவனங்களில் அவ்வாறு செயல்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இத்தகைய நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விதிமுறைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வரைவு விதிகள் தான். இவை முழுமையாக அமல்படுத்தப்பட்ட விதிகள் கிடையாது. இவற்றை முழுமையாக அமல்படுத்தும் போது நகைகளை திருப்புவதில் சிக்கல் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.