/indian-express-tamil/media/media_files/2025/05/13/SkrdBsSOoQsinMfW9nYe.jpg)
அஞ்சல் துறை, முதிர்ச்சியடைந்தும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்படாமலோ அல்லது மூடப்படாமலோ உள்ள பல்வேறு சிறுசேமிப்புத் திட்டக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை அறிவித்துள்ளது. வைப்புத் தொகையாளர்கள் பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இதுபோன்ற கணக்குகளை கண்டறிந்து முடக்கும் நடவடிக்கையை வருடத்திற்கு இருமுறை மேற்கொள்ள அஞ்சல் துறை சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிறுசேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை:
உங்கள் கணக்கு முதிர்ச்சியடைந்த மூன்று ஆண்டுகளுக்குள் மூடப்படாவிட்டால், அது முடக்கப்படும் என்பதை சிறுசேமிப்புத் திட்டக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்தெந்த சிறுசேமிப்புக் கணக்குகள் முடக்கப்படும்?
அஞ்சல் துறையின் உத்தரவின்படி, டைம் டெபாசிட்கள் (TD), மாத வருமானத் திட்டம் (MIS), தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (NSC), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), கிசான் விகாஸ் பத்ரா (KVP), தொடர் வைப்புத்தொகை (RD) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்குகள் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டக் கணக்குகள் ஆகியவை செயல்படாமல் இருந்தால் முடக்கப்படும்.
கணக்கு முடக்கப்பட்டால் என்ன நடக்கும்?
ஒரு அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு முடக்கப்பட்டால், பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், ஸ்டாண்டிங் ஆர்டர்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும்.
ஜூலை 15, 2025 தேதியிட்ட உத்தரவின்படி, "வைப்புத் தொகையாளர்கள் பணத்தின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த, இந்த முடக்கும் செயல்பாடு வருடத்திற்கு இருமுறை தொடர்ச்சியான சுழற்சியாக நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கணக்குகளை அடையாளம் கண்டு முடக்கும் செயல்முறை, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி 15 நாட்களுக்குள் முடிக்கப்படும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முதிர்ச்சி அடையும் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்படும்."
உங்கள் சிறுசேமிப்புத் திட்டக் கணக்கை எவ்வாறு மீண்டும் செயல்படுத்துவது?
உங்கள் கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை அஞ்சல் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் முடக்கப்பட்ட கணக்கின் பாஸ்புக் அல்லது சான்றிதழ், மொபைல் எண், பான் கார்டு மற்றும் ஆதார் அல்லது முகவரிச் சான்று போன்ற KYC ஆவணங்கள், கணக்கு மூடும் படிவம் உள்ளிட்டவற்றை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் துறை, முதலில் வைப்புத் தொகையாளரின் விவரங்களை சரிபார்த்து, கணக்கு வைத்திருப்பவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்புடைய பதிவுகளுடன் ஆராயும். அதன் பின்னர், கணக்குகள் செயல்படுத்தப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.