பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக இதுவரை 17 லட்சம் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி இருப்பதாக கூறியுள்ளது தனியார் வங்கியான ஐசிஐசிஐ .
கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களின் நிதி நிலையினை மேம்பாடு அடையச் செய்ய "சுய உதவிக் குழு - வங்கிகளுடன் இணைந்து செயல்படுதல்" என்ற திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4300 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கி இருப்பதாக கூறியுள்ளது வங்கி நிர்வாகம்.
வங்கியின் மூத்த அதிகாரி அவிஜித் சாஹா பேசுகையில் "ஐசிஐசிஐ வங்கியானது பெண்களின் சுயமுன்னேற்றத்தைப் பற்றி அதிக அக்கறை கொண்டது. மேலும் கிராமப் புற, நகரின் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் தமிழ் பெண்கள் சுய தொழில் முனைவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர்கள். இந்த காரணம் தான் எங்கள் வங்கி, அவர்களுடைய கனவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களை பங்கு பெற செய்தது" என்றார்.
"சுய உதவிக் குழுக்கள் மூலமாக நாங்கள் 17 லட்சம் இல்லங்களில் வசித்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமைக்குரிய விசயமாக இருக்கிறது. மேலும் வருகின்ற 2020ல் எங்களின் இலக்கு சுமார் 25 லட்சம் பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் அளவிற்கு உயர வேண்டும் என்பது தான்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுய உதவிக் குழுக்கள் என்பது எட்டு வரை பத்து பெண்கள் குழுவாக இருந்து, விவசாயப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கோவிலுக்குத் தேவையான பூஜைப் பொருட்கள், மற்றும் ஆடைகள் வடிவமைப்பு போன்ற சுய தொழிலில் ஈடுபடுபவர்கள் .
சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த வகையில் வங்கிச் சேவைகள் செய்த காரணத்தால் சிறந்த வங்கி என்று பின்வரும் மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள் எங்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்துள்ளார்கள். 32 மாவட்டங்களில், இராமநாத புரம், கடலூர், மதுரை, கன்யாகுமரி, விழுப்புரம், அரியலூர், தர்மபுரி, நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விருதுகளை வாங்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் 32 மாவட்டங்களில் சுமார் 480 கிளைகளையும் 1500ற்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மையங்களையும் கொண்டுள்ளது ஐசிஐசிஐ வங்கி.