ஆர்.சந்திரன்
பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் சில அதிகாரிகளோடு கூட்டணி அமைத்து, இந்திய வங்கிகளில் நீரவ் மோடி செய்த நிதி மோசடி 12,500 கோடி ரூபாயைத் தாண்டும் என கடந்த வாரத்தில் சொல்லப்பட்டது. அது மேலும் அதிகரிக்கும் என, தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மறுபுறம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்தியாவின் பல மாநிலங்களில் மட்டுமின்றி, மற்ற பல நாடுகளிலும் நீரவ் மோடி வாங்கிக் குவித்திருக்கும் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளைக் கைப்பற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதனாலெல்லாம் நிஜமாகவே பலன் இருக்குமா என்ற கேள்விகள் எழுகிறது.
நீரவ் மட்டுமின்றி, ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஓடிவிட்ட விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களோடு, இந்தியாவிலேயே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரோட்டோமெக் பேனா அதிபர் போன்ற மற்ற வங்கிப் பண மோசடியாளர்களின் சொத்துகளை முடக்குவதால் எதாவது பலன் ஏற்படுமா என்ற கேள்வியை, அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று எழுப்புகிறது.
Insolvancy & Bankruptcy Code, அதாவது புதிய திவால் சட்டத்தின்படியான வழக்கு ஒன்றில் தில்லியில் உள்ள தேசிய குறைதீர்க்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியான ஒரு தீர்ப்பின்படி, ஒரு நிறுவனத்துக்காக வங்கியில் கடன் பெற்றவரது பெயரில் உள்ள தனிப்பட்ட சொத்துகளைக் கையகப்படுத்தவும், விற்கவும், அதன்மூலம் வங்கிக் கடனை வசூல் செய்யவும் அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வெளியாகியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வி.ராமகிருஷ்ணன் இயக்குனராக உள்ள வீசன்ஸ் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் வாங்கிய கடன் வாராக்கடனாதில் 2002ல் வசூல் நடவடிக்கைத் தொடங்கியுள்ளது. 61.13 கோடி ரூபாய்க்கான இந்த கடன் வசூல் விஷயத்தில், தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது. எனவே, நிறுவனத்தின் பெயரில் அல்லாமல், வேறு தனிநபரின் பெயரில் உள்ள சொத்து பறிமுதல் எந்த வகையில் உதவும் என்பதை இப்போதே மேம்போக்காக பார்க்க இயலாது என்றே தோன்றுகிறது.
தற்போதைய தகவல்கள்படி, நீரவ் மோடி மற்றும் அவரது சகாக்கள் யாரும் வங்கியில் முறைப்படி கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டப்பட்டதாக தெரியவில்லை. அத்தரப்பினர் மீதன அனைத்து புகார்களுமே, அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் வங்கிப் பணத்தை மோசடி செய்தது, வருவாய்க்கு மேல் சொத்து சேர்த்தது போன்ற குற்ற வழக்குப் பிரிவுகளின்படித்தான் எனச் சொல்லப்பட்டுவது சற்றே ஆறுதல் தருகிறது. ஆனாலும், தொழிலதிபர்களின் மீது எதையெல்லாம் காரணமாக வைத்து வழக்கு தொடரப்படுகிறது என்பதும் கடன் வசூல் விஷயத்தில் முக்கியமானதாக அமையும் போலத் தெரிகிறது.
இதுஒருபுறமிருக்க, நீரவ் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டு 28 நாட்கள் முடிந்த நிலையிலும் - அவரது பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் அந்த்வார்ப் (Antwarp)கிளையில் உள்ள வங்கிக் கணக்கு மட்டும் செயல்படும் நிலையிலேயே இன்னும் தொடர்வது எப்படி என்ற கேள்வியை சில ஊடகங்கள் எழுப்பி வருகின்றன. இன்றைய பிஸினஸ் ஸ்டாண்ட்ர்ட் வணிக நாளேடும் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு நீரவ் மோடிக்கு நெருங்கிய உறவினர்களான மனைவி, மக்கள், மாமா, சகோதரர் உள்ளிட்ட பலரும் வெளிநாடு சென்றுவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில், நீரவ் மோடியின் சகோதரர் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து 3,50,000 அமெரிக்க டாலர் மதிப்புக்கு கடன்பெற்றது எப்படி என்ற கேள்வியை எழுப்பி சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாவதாகவும் இந்த நாளேடு செய்தி தெரிவிக்கின்றது.
எத்தனை தீவிரமான பிரச்னைகள் இருந்தாலும், "எரியும் கொள்ளியில் இருந்து, பீடிக்கு நெருப்பு தேவை" என கேட்கும் மனோபாவம் கொண்ட ஆட்களை திருத்தவே முடியாதோ!