முதலீட்டாளர்கள் நீண்ட கால சேமிப்பை அதிகரிக்க அஞ்சலகங்கள் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்தியா போஸ்ட் பல்வேறு முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது.
இது இரட்டை நோக்கத்திற்கு சேவை செய்கிறது. ஒன்று முதலீடு மற்றும் இரண்டாவது பிரிவு 80C இன் கீழ் வருமான வரி சலுகைகளை வழங்குவது ஆகும்.
அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), 5 ஆண்டு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) குறித்து பார்க்கலாம்.
1) பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
தற்போது பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் 7.1% ஆகும். 15 வருட முதிர்வு காலத்தைக் கொண்ட பிபிஎஃப் திட்டம் வரி விலக்கு அந்தஸ்தைப் பெறுகிறது.
ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டிய குறைந்தபட்சத் தொகை ₹500 மற்றும் அதிகபட்ச வரம்பு ₹1.5 லட்சம் ஆகும்.
ஒரு வருடத்திற்கு ₹1.5 லட்சம் வரையிலான உங்கள் பங்களிப்புகள் பிரிவு 80C-ன் கீழ் வருமான வரி விலக்குக்குத் தகுதிபெறும்.
பிபிஎஃப் இன் சிறந்த அம்சம் என்னவென்றால், சம்பாதித்த வட்டிக்கும் வரி விதிக்கப்படாது, மேலும் முதிர்வின் போது பெறப்படும் தொகைக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
2) சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)
சுகன்யா சம்ரித்தி கணக்கின் வட்டி விகிதம் 7.6% ஆகும். இதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் எஸ்எஸ்ஒய் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டிய குறைந்தபட்சத் தொகை ₹250ம், அதிகபட்ச வரம்பு ₹1.5 லட்சமும் ஆகும்.
3) 5 ஆண்டு அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டம்
5 வருட அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு நிதியாண்டில் ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
இதில், குறைந்தபட்ச முதலீடு ₹1000 ஆகும். இருப்பினும் மேல் வரம்பு இல்லை. தற்போது, 5 ஆண்டு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டம் 7% வட்டியை பெறுகிறது.
4) தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)
தற்போது, தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு 7% வட்டி விகிதம் கிடைக்கிறது. என்.எஸ்.சியில் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
குறைந்தபட்ச முதலீடு ₹100 ஆகும். ஒரு நிதியாண்டில் NSCயில் ₹ 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்கள் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்குக்குத் தகுதி பெறும்.
5) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒருவர் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கைத் திறக்கலாம். தற்போது, SCSS ஆண்டுக்கு 8% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கிறது.
முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ₹1.5 லட்சம் வரையிலான முதலீடு பிரிவு 80C வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுகிறது, ஆனால் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“