ஆர்.சந்திரன்
கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் உயர்மதிப்பு கொண்ட இந்திய ரூபாயின் மதிப்பு இழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது கையில் இருந்த பெரும் ரொக்கத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்தியவர்கள் பாதிப்பின்றி தப்ப, கடைசி வாய்ப்பை இந்திய வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து முன்னணி ஊடகங்களில் அது வெளியிட்டுள்ள விளம்பரங்களின்படி, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கடந்த 2 ஆண்டுகளின் திருத்திய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து, அதன் மூலமாக வருமான வரித்துறையின் கடும் நடவடிக்கைகளில் இருந்து தப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், பெரும் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய பலருக்கு, அந்த தொகையை வருமானமாகப் பெற்ற வழியை தெரிவிக்கும்படி வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 2016-17 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை, தற்போது திருத்தி தாக்கல் செய்து கொள்ளலாம். அதில், ரொக்க டெப்பாசிட் தொகையையும் கணக்கில் காட்டலாம். எனினும் முன்னதாகவே கணக்கில் காட்டாத கூடுதல் தொகையைக் குறிப்பிட்டு, அதற்கு செலுத்த வேண்டிய வரி, தாமதாக செலுத்தும் வரிக்கான வட்டி போன்றவற்றைச் செலுத்த வேண்டும். இதன்மூலம், இனி தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அதோடு, தாமதமாகச் செலுத்தும் வருமான வரிக்கு, 12 சதவீதம் வட்டி செலுத்த வேண்டி வரும். ஆனாலும், இந்த வரி, வட்டி அனைத்தும் சேர்ந்தாலும், அது - வருமான வரித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிக்கப்படும் அபராதத் தொகையை விட குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அதோடு, ரெய்ட், விசாரணை உள்ளிட்ட பல தலைவலிகளைத் தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Key words :
முக்கிய சொற்கள் :