Income Tax News: நிரந்தர கணக்கு (PAN) எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது முதல் ஒரு லட்சம் பங்கு முதலீடுகளை LTCG பதிவு செய்வது என சில நிதி சார்ந்த பணிகளை இந்த காலகெடுவுக்குள் நீங்கள் செய்து முடிக்க வேண்டியுள்ளது. பல முக்கிய நிதி பணிகளுக்கு மார்ச் 31, 2020 தான் காலக்கெடுவாக உள்ளது.
1. பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது
பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு 31 மார்ச் 2020. இதன் பிறகும் நீங்கள் இந்த இரண்டு ஆவணங்களையும் இணைக்காமல் இருந்தால் வருமான வரித்துறை உங்களுக்கு ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்க முடியும். எனவே ஆதார் மற்றும் பான் எண்ணை உடனடியாக இணைக்க அறிவுறுத்தப்படுகிறது. வருமான வரி செலுத்த, புதிய வங்கி கணக்கு துவங்க என பல முக்கியமாக நிதி பணிகளுக்கு இந்த இரண்டு ஆவணங்களை இணைப்பது இன்றியமையாதது.
2. 2019-2020 வரித் தாக்கல்
காலம் கடந்து வருமான வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும். நிதி ஆண்டு 2018-19 க்கான வருமான வரி செலுத்த கடைசி தேதி ஜூலை 31, 2019, பின்னர் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. தாமதமாக வருமன வரியை கட்டுவதற்கான அடுத்த காலக்கெடு, டிசம்பர் 31, 2019. வரி செலுத்துவதற்கான இறுதி காலக்கெடு 31, மார்ச் 2020.
3. வரி சேமிப்பு முதலீடுகள்
தகுதியான முதலீடுகள் மற்றும் காப்பீடுகளை வாங்கி கிடைக்கக் கூடிய வரி விலக்கு சலுகைகளை பயன்படுத்தி நிதி ஆண்டு 2019-2020 க்கான வரிச் சுமையை இன்னும் நீங்கள் குறைக்கவில்லையென்றால் அதை 31 மார்ச் 2020 -க்குள் செய்து கொள்ளுங்கள். வரி செலுத்துபவர்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள வரி சேமிப்பு நடவடிக்கைகளை கணக்கில் கொள்வதில்லை. எனவே தங்களுக்கு தேவைப்படும் சரியான வரி சேமிப்பை மதிப்பீடு செய்ய தவறிவிடுகின்றனர்.
4. வீட்டுக் கடன் சலுகை
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்புற திட்டத்தில், தகுதிவாய்ந்த முதல் முறை வீடு வாங்குபவர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க வீட்டு கடன் வாங்கும் போது முன்கூட்டியே கடன் இணைக்கப்பட்ட வட்டி மானியத்தை பெறலாம். இந்த திட்டம் நான்கு வருமான பிரிவுகளில் செயல்படுத்தப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் - I, நடுத்தர வருவாய் பிரிவினர் - I I. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் இந்த சலுகையை 2022 மார்ச் 31 வரை பெறலாம். ஆனால் நடுத்தர வருவாய் பிரிவினர் - I மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் - I I ஆகிய வகுப்பினர் இந்த சலுகையை 2020 மார்ச் 31 வரை மட்டும் தான் பெற முடியும்.
5. ஓய்வூதிய திட்டம்
Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY) ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலீட்டு பயன்களை பெற கடைசி தேதியும் 31, மார்ச் 2020 தான். எனவே இத்திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் தீர்மானித்திருந்தால் வேகமாக செய்து விடுங்கள்.
6. பங்கு முதலீடு
கடைசியாக, உங்கள் பங்கு முதலீட்டில் நீண்ட கால மூலதன ஆதாயங்களை (long-term capital gains LTCG) பதிவு செய்ய விரும்பினால், உங்கள் LTCG தொகை ஒரு லட்சத்தை தாண்டாமல் இருந்தால் மார்ச் 31, 2020 க்கு முன் ஒரு லட்சம் வரையிலான லாபத்தை நீங்கள் பதிவு செய்யலாம். இது ஒரு லட்சத்தை தாண்டும் LTCG களுக்கு 10 சதவிகித வரி விதிப்பில் இருந்து தவிர்க்க உங்களுக்கு உதவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"