/indian-express-tamil/media/media_files/2025/05/24/GrV8GuD6Hue4lVtZ026X.jpg)
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2024-25 நிதியாண்டுக்கான 2025-26 மதிப்பீட்டு ஆண்டின் அனைத்து வருமான வரித் தாக்கல் (ITR) படிவங்களையும் வெளியிட்டுள்ளது. படிவங்களின் கட்டமைப்பு பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், நிதிச் சட்டத்தில் (Finance Act) செய்யப்பட்ட சமீபத்திய திருத்தங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், வரி செலுத்துவோர் பொதுவாகச் செய்யும் சில தவறுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். இத்தகைய தவறுகள் உங்கள் வருமான வரித் தாக்கலை தாமதப்படுத்தலாம். மேலும், வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ்களைப் பெற வழிவகுக்கலாம் அல்லது உங்கள் தாக்கல் நிராகரிக்கப்படலாம். எனவே, இந்த பிழைகளைத் தவிர்ப்பதன் மூலம் சரியான வருமான வரித் தாக்கலை உறுதி செய்யலாம்.
தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகள்:
1. வருமான விவரங்களில் பொருந்தாமை (Mismatch in income details):
உங்கள் வருமான வரித் தாக்கலில் (ITR) நீங்கள் தெரிவிக்கும் வருமானம், Form 26AS, AIS (ஆண்டு தகவல் அறிக்கை) மற்றும் TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) ஆகியவற்றில் உள்ள தகவலுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வருமான வரித் துறையிடமிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரலாம்.
2. தவறான ITR படிவத்தைத் தேர்ந்தெடுத்தல் (Selecting the wrong ITR form):
உங்கள் வருமான வகையின் அடிப்படையில் சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். எடுத்துக்காட்டாக, ரூ. 50 லட்சம் வரை வருமானம் உள்ள சம்பளம் பெறும் நபர்கள் ITR-1 படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். வணிக வருமானம் அல்லது மூலதன ஆதாயங்கள் உள்ளவர்களுக்கு பிற படிவங்கள் தேவைப்படும். சரியான படிவத்தைத் தேர்வு செய்யத் தவறினால், உங்கள் தாக்கல் நிராகரிக்கப்படலாம்.
3. அனைத்து வருமானத்தையும் தெரிவிக்காமல் இருப்பது (Not reporting all income):
PPF வட்டி அல்லது விவசாய வருமானம் போன்ற விலக்கு அளிக்கப்பட்ட வருமானம் உட்பட உங்கள் அனைத்து வருமான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் வாடகை வருமானத்தையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். எந்த வருமானத்தையும் மறைப்பது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.
4. வட்டி மற்றும் ஈவுத்தொகை வருமானத்தைத் தவறவிடுதல் (Missing interest and dividend income):
சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்புத் தொகைகள் (FDs) மற்றும் ஈவுத்தொகைகளில் இருந்து கிடைக்கும் வட்டியை உங்கள் வருமானத்தில் சேர்க்க வேண்டும். வரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டிருந்தாலும், இந்த வருமானங்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். TDS என்பது வருமானத்தை வெளிப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதில்லை.
5. தவறான விலக்குகள் (Incorrect exemptions):
நீங்கள் தகுதி வாய்ந்த விலக்குகளை மட்டுமே கோர வேண்டும். தாக்கல் செய்வதற்கு முன், பிரிவு 80C, 80D மற்றும் 80G போன்ற பிரிவுகளின் கீழ் நீங்கள் கோரும் விலக்குகளை சரிபார்க்கவும்.
6. சரிபார்க்கத் தவறுதல் (Failing to verify the return):
வருமான வரித் தாக்கலை சமர்ப்பித்த பிறகு, 30 நாட்களுக்குள் அதை சரிபார்க்க வேண்டும். இதை நீங்கள் மின்னணு முறையில் செய்யலாம் அல்லது கையொப்பமிடப்பட்ட ITR-V படிவத்தை, பெங்களூருவுக்கு அனுப்பி சரிபார்க்கலாம்.
7. வெளிநாட்டுச் சொத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது (Not disclosing foreign assets):
இந்தியாவில் வசிக்கும் வரி செலுத்துவோர் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் அல்லது வெளிநாட்டில் உள்ள பங்குகள் உட்பட வெளிநாட்டுச் சொத்துகளை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வெளிப்படுத்தத் தவறினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
8. சுய மதிப்பீட்டு வரியை புறக்கணித்தல் (Ignoring advance or self-assessment tax):
தவறான வரி பாக்கிகள் அல்லது குறைவான பணத்தைத் திரும்பப் பெறுவதைத் தவிர்க்க, ஏற்கனவே செலுத்தப்பட்ட அனைத்து வரிகளையும் குறிப்பிடவும்.
9. காலாவதியான படிவங்கள் அல்லது தானாக நிரப்பப்பட்ட தரவை பயன்படுத்துதல் (Using outdated forms or pre-filled data blindly):
எப்பொழுதும் சமீபத்திய படிவத்தைப் பயன்படுத்தவும். மேலும், சமர்ப்பிக்கும் முன், தானாக நிரப்பப்பட்ட அனைத்து தகவல்களின் துல்லியத்தையும் சரிபார்க்கவும். முன்பே நிரப்பப்பட்ட தரவுகளில் பிழைகள் இருக்கலாம், எனவே கவனமாக சரிபார்ப்பது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.