இந்தியாவுக்கு "பை... பை!" சொல்லும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

"இந்தியாவில் வாழ்க்கைத் தரம் சரியாக இல்லை; இனியும் இங்கேயே தன்னால் சமாளிக்க முடியாது" என, 7000 இந்திய கோடீஸ்வர்கள் 2017ல் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தாய்நாட்டுக்கு “பை…!” சொல்லும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதன்படி. “இந்தியாவில் வாழ்க்கைத் தரம் சரியாக இல்லை; இனியும் இங்கேயே தன்னால் சமாளிக்க முடியாது” என, 7000 இந்திய கோடீஸ்வர்கள் 2017ம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். அவர்கள், அமெரிக்கா, அரபு குடியரசு, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என சர்வதேச பொருளாதார இடப் பெயர்வு தொடர்பான இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

புதிய உலகில் சொத்துகளின் மதிப்பு குறித்து ஆய்வு செய்த “நியு வேர்ல்ட் வெல்த்” என்ற அமைப்பின்படி, இந்தியாவில் மட்டுமின்றி, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் இதுபோன்ற இடப் பெயர்வு அதிகமாக நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. அதோடு, இந்த இடப் பெயர்வு அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை 2017ல் 7 ஆயிரமாக இருந்த இது, 2016ல் 6 ஆயிரமாகவும், 2015ல் 4 ஆயிரம் எனவும் இருந்தது.

இந்தியாவில் நடந்தது போலவே, 2017ல் சீனாவில் இருந்து 10 ஆயிரம், துருக்கியில் இருந்து 6 ஆயிரம், இங்கிலாந்தில் இருந்து 4 ஆயிரம், பிரான்ஸில் இருந்து 4 ஆயிரம் மற்றும் ரஷ்யாவில் இருந்து 3 ஆயிரம் கோடீஸ்வரர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறுபவர்கள், விரும்பி செல்லும் நாடுகளின் பட்டியலில் பலரது தேர்வாக முன்னிலை பெறுவது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள் எனவும் தெரிய வருகிறது.

உலக அளவில் மிக அதிக கோடீஸ்வர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் 2017ம் ஆண்டு நிலவரப்படி, 3 லட்சத்து 30 ஆயிரத்து 400 கோடீஸ்வரர்கள் உள்ளனர் எனவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close