Indian Bank Tamil News: பொதுவாக வங்கிகளில் தவணை தள்ளுபடி என்கிற பெயரில் சில மோசடி ஆசாமிகள் உங்களுக்கு ஓடிபி அனுப்பிவிட்டு, அதனை கேட்பார்கள். மறந்தும்கூட செல்போனில் வரும் ஓடிபி எண்களை யாரிடமும் கூறாதீர்கள். அது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் கும்பலின் சதி. அதற்கு இரையாகாமல், வங்கியின் அறிவுறைப்படி நடந்து கொள்வது நல்லது.
கொரோனாவை விட கொடிய நபர்களும் உலவுகிற காலகட்டம் இது! இல்லாவிட்டால் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அதை பயன்படுத்தி உங்கள் பேங்க் பேலன்ஸை காலி செய்ய ஒரு கூட்டம் களம் இறங்குமா? அந்தக் கும்பலிடம் சிக்காமல் இருக்க உங்களை எச்சரிக்கிறது, இந்தியன் வங்கி.
பொதுத்துறை வங்கிகளில் அதிக வாடிக்கையாளர்களை உடைய வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. அண்மையில் கொரோனா சிக்கலைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த 3 மாத அவகாசத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
Indian Bank emi moratorium: இந்தியன் வங்கி முக்கிய அறிவிப்பு
ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்பட பெரும்பாலான வங்கிகள் இந்த ஆறுதலான நடவடிக்கையை செயல்படுத்தி வருகின்றன. 1-3-2020 முதல் 31-5-2020 வரையிலான தவணைகளை 1-6-2020 முதல் செலுத்தலாம் என இந்தியன் வங்கி ஏற்கனவே அறிவித்தது. இதனை எஸ்.எம்.எஸ். மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்திருக்கிறது.
இந்தச் சூழலில் தவணைச் சலுகைக்காக வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போல நாடகமாடி, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சுருட்ட ஒரு கும்பல் கிளம்பியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பான எச்சரிக்கையை இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது.
அதில், ‘கொரோனா நிவாரணமாக தவணை தள்ளிவைப்பு தொடர்பாக இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் ஓ.டி.பி எண் கேட்பதே இல்லை. எனவே மோசடிக்காரர்களிடம் உஷாராக இருங்கள்’ என கேட்டுக் கொண்டிருக்கிறது இந்தியன் வங்கி.
அதாவது, உங்கள் வங்கியின் தவணைத் தொகை தள்ளி வைப்புக்காக எனக் கூறி உங்கள் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி, அதில் வரும் ஓடிபி எண்ணை உங்களிடம் கேட்டால் உஷாராகிவிடுங்கள். அவர்கள் மோசடிக்காரர்களாக இருப்பார்கள். உங்கள் வங்கியிலோ, சைபர் கிரைமிலோ புகார் கொடுத்து மோசடிக்காரர்கள் மீது நடவடிக்கைக்கும் உட்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.