Indian Economy GDP will increase next year Pitch report : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த ஆண்டு உயரும் என ‘பிட்ச்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்து வருகின்றது. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைத்து கிளை தொழிற்சாலைகளை மூடி வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த ஆண்டு 7.1 சதவீதமாக உயரும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது.
தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்த ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.6 சதவீதமாக இருக்கும். இதற்கு முந்தைய ஆண்டின் வளர்ச்சி விகிதமான, 6.8 சதவீதத்திலிருந்து, இது குறைவாகவே இருக்கும். மேலும், அதிக கடன் காரணமாக, அரசின் நிதிக் கொள்கையை எளிதாக்குவதற்கு குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன.
உள்நாட்டு தேவைகள் குறைந்து வருகின்றன. தனியார் நுகர்வு மற்றும் முதலீடு ஆகிய இரண்டுமே மந்தமாக இருக்கிறது. உலகளாவிய வர்த்தக சூழலும் பலவீனமாக இருக்கிறது.
கடந்த ஏப்ரல் – -ஜூன் காலாண்டில், தனியார் நுகர்வின் பங்களிப்பு, 1.8 சதவீதமாக சரிந்துள்ளது. இது, இதற்கு முன், சராசரியாக, 4.6 சதவீதமாக, கடந்த நான்கு காலாண்டுகளில் இருந்துள்ளது.தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியானது, 0.6 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு, பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வாகன துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகள், மூலதன லாபத்துக்கான வரியை குறைத்தது, வங்கிகளுக்கு மூலதன உதவி, அன்னிய நேரடி முதலீட்டை எளிதாக்குவது, வங்கிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.மேலும், கடந்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முந்தைய அரசின் நிதி கொள்கைகள் அப்படியே தொடரவும் வாய்ப்பாக அமைந்தது.
நடுத்தர காலத்தில், அரசு கடனின் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக உள்ளது, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், நீடித்த முதலீட்டு வளர்ச்சியும் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இருப்பினும், இன்னொரு பக்கம் அரசின் கடன் சுமை அதிகரித்து வருகிறது.
நிதி ஒருங்கிணைப்பு இல்லாதது, அதிக பட்ஜெட் செலவினம் மற்றும் தளர்வான பொருளாதார கொள்கைகள் காரணமாக, அரசின் கடன் சுமை அதிகரித்து வருகிறது.இதனால், அதிக பணவீக்கமும் நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரிக்கிறது. மேலும், வெளியிலிருந்து வரும் நிதியிலும் அழுத்தத்தை அதிகரிக்கிறது.இந்திய ரிசர்வ் வங்கி, நான்கு முறை தொடர்ந்து வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை, 1.10 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பை அறிவித்து உள்ளது. ஜூலை மாத பணவீக்கம், 3.2 சதவீதமாக உள்ளது. இது இலக்கு அளவான, 4 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.