ஆர்.சந்திரன்
பிட்ஸா, மற்ற உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வீட்டில் இருந்து போன் செய்தே பெற்றுக் கொள்வதுபோல, டீசல் வாகனம் வைத்திருப்பவர் கேட்டுக் கொண்டால், வீடு தேடி வந்து டீசல் வழங்கும் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக இந்த வசதி, பூனாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சப்ளைக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் பிரத்யேக வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இப்போது பெட்ரோல் பங்குகளுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனம் போல, இல்லாமல், இந்த வாகனம் சிறிய டேங்க் கொண்டதாகவும், அதில் இருந்து டீசலை வெளியேற்றி வழங்கிட, தற்போது பெட்ரோல் பங்குகளில் உள்ளது போன்ற விநியோக பம்ப் கொண்ட அமைப்பு ஒன்றும் சேர்ந்தே அந்த டேங்க் உள்ள வாகனத்தில் இடம்பெற்றுள்ளது. அதனால், தொலைப்பேசி மூலம், அல்லது இ மெயில் மூலம் முன்னதாக கோரிக்கை வைத்தால், உங்களது இருப்பிடத்துக்கே - வீடு, அலுவலகம், தொழிற்சாலை, உற்பத்தி கூடம் என எங்கும் வந்து, தேவையான டீசல் வழங்க எற்பாடு செய்யப்படும் எனத் தெரிகிறது.
தற்போது இந்த வாகனம் மூலம் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. பெட்ரோலின் உடனடி தீப்பிடிக்கும் ஆபத்தினால், அது தவிர்க்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தபடி இந்த முயற்சி தற்போது தொடங்கப்பட்டுள்ளதகவும் தெரிகிறது.
ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் இதே போன்றதொரு முயற்சியை பெங்களுருவைச் சேர்ந்த ஏஎன்பி பியூல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கியபோது, எரிபொருள் கலன் பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து தீத்தடுப்பு துறையின் ஆலோசனைப்படி இது திரும்பப் பெறப்பட்டது. தற்போது இது உரிய அனுமதியுடன் அரசு நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை தற்போது தொடங்கயிருப்பதாகச் சொன்னாலும், இதில் நமது இடத்திலேயே எரிபொருள் பெற குறைந்தபட்ச, அல்லது அதிகபட்ச வரம்புகள் என, எதுவும் உண்டா என்பதும், டீசலின் விலையில் கூடுதலாக கட்டணம் எதுவும் உண்டா என்பது குறித்தும் தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், மற்ற இடங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.