/indian-express-tamil/media/media_files/2025/10/01/iob-front-2025-10-01-19-30-01.jpg)
வங்கியின் இந்த முக்கிய முடிவு, எஸ்.பி பப்ளிக் ('SB-Public') என்ற சேமிப்புக் கணக்குத் திட்டத்திற்குக் மட்டுமே பொருந்தும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி - IOB), தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, சில சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையைப் (Minimum Average Balance - MAB) பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராதக் கட்டணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.
எந்தக் கணக்குகளுக்கு விலக்கு?
வங்கியின் இந்த முக்கிய முடிவு, எஸ்.பி பப்ளிக் ('SB-Public') என்ற சேமிப்புக் கணக்குத் திட்டத்திற்குக் மட்டுமே பொருந்தும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததால், இனி இந்தக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது. வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையை மேலும் எளிதாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரீமியம் கணக்குகளுக்கு மாற்றம் இல்லை
அதே சமயம், வங்கியின் பிரீமியம் சேமிப்புக் கணக்குகளான எஸ்.பி மேக்ஸ் (SB-MAX), எஸ்.பி ஹெச்.என்.ஐ (SB-HNI), எஸ்.பி பிரைம் (SB Prime), எஸ்.பி பிரியரிட்டி (SB Priority), எஸ்.பி பிரிவிலேஜ் (SB Privilege), என்.ஆர்.ஐ எளிவேட் (NRI Elevate), என்.ஆர்.ஐ பிரிவிலேஜ் (NRI Privilege), மற்றும் என்.ஆர்.ஐ சிக்னேச்சர் (NRI Signature) போன்ற திட்டங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகைக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என ஐ.ஓ.பி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
முன்னதாகவே விலக்கு அளிக்கப்பட்ட திட்டங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) ஏற்கனவே, பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY), அடிப்படை சேமிப்புக் கணக்கு (BSBDA), சிறு கணக்குகள், ஐ.ஓ.பி எஸ்.பி சம்பளத் தொகுப்பு (IOB SB Salary Package), ஐ.ஓ.பி அறுபது ப்ளஸ் (IOB Sixty Plus), ஐ.ஓ.பி எஸ்.பி ஓய்வூதியதாரர் திட்டம் (IOB SB Pensioner Scheme), மற்றும் ஐ.ஓ.பி எஸ்.பி அரசு கணக்கு (IOB SB Government Account) போன்ற பல்வேறு சமூக மற்றும் குறிப்பிட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகைக் கட்டணங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்திற்கு உண்டான அபராதக் கட்டணங்கள், ஏற்கனவே உள்ள விதிகளின்படி தொடர்ந்து வசூலிக்கப்படும் என்றும் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
வங்கியின் செயல்பாடு
1937-ம் ஆண்டு நிறுவப்பட்டு, 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நாடு முழுவதும் 3,345 கிளைகளையும் சுமார் 3,461 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், வங்கி மொத்தம் ரூ.5,93,213 கோடி வணிகம், ரூ.2,358 கோடி இயக்க இலாபம், மற்றும் ரூ.1,111 கோடி நிகர இலாபத்தைப் பதிவு செய்து வலுவான நிதி நிலையில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.