indian overseas bank net banking : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. ஐஒபி வங்கியின் எம்.சி.எல்.ஆர். எனப்படும் கடன் வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
எம்.சி.எல்.ஆர். என்பது வங்கிகளின் வட்டிச் செலவின அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கடன் வட்டி விகிதமாகும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனைத்து முதிர்வுகளிலும் இந்த வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது. இதனையடுத்து ஓராண்டு முதிர்வு கால வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைந்து 8.70 சதவீதமாக உள்ளது.
இதே போன்று 2–3 ஆண்டுகளுக்கான எம்.சி.எல்.ஆர். முறையே 8.80 சதவீதம் மற்றும் 8.90 சதவீதமாக குறைந்து இருக்கிறது. 6 மாதங்களுக்கான இந்த வட்டி விகிதம் முதலில் 8.60 சதவீதமாக இருந்தது. இது இப்போது 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கான வட்டி விகிதம் (8.50 சதவீதத்தில் இருந்து) 8.45 சதவீதமாக குறைந்துள்ளது. இது தவிர, சுப கிரஹா திட்டம், என்ஆர்ஐ வீட்டு கடன், வீடு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களின் கீழ் வீட்டு கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணங்களை விழாக்கால சலுகையாக வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்!
அதே போல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஓபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. மேலும், இந்தியாவின் உள்ள 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.