மொத்த செல்போனின் விலையில் 3-5% வரை இடம் பிடிக்கும் பேட்டரியை உருவாக்கும் தொழிற்சாலை இந்தியாவில் எங்கும் இல்லை. 2019ற்குள் இந்தியாவில் லித்தியம் - இயன் பேட்டரிகளை உருவாக்கும் தொழிற்சாலை உருவாகிவிடும்.
சென்னையைச் சேர்ந்த முனோத் தொழிற்குழுமம், இந்தியாவின் முதல் லித்தியம் - இயன் பேட்டரிகளை உருவாக்கும் தொழிற்சாலையினை ஆந்திரப் பிரதேச மாவட்டம் திருப்பதியில் உருவாக்க முடிவு செய்துள்ளது. ரூ. 799 கோடியினை பயன்படுத்தி முதற்கட்ட கட்டுமான பணிகளை 2019லும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகளை 2022ற்குள்ளும் உருவாக்கும் திட்டத்தில் இயங்கி வருகின்றது முனோத் குழுமம். இதுவே இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் தொழிற்சாலையாகும். இதன் மூலம் சுமார் 1700 மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையினை அளித்திருக்கின்றது இக்குழுமம்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டி ஒன்றில் முனோத் குழுமத்தின் இயக்குநர் திரு. விகாஸ் முனோத் "நாங்கள் இரண்டு வருடங்களாக இத்திட்டத்திற்காக உழைத்துவருகின்றோம். இந்தியாவில் சுமார் 25 கோடி மொபைல் போன்கள் உருவாக்கப்படுகின்றன. அதே அளவு பேட்டரிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றார்கள். இறக்குமதி என்பதற்கு பதிலாக சொந்தமாக உற்பத்தி செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே இத்தொழிற்சாலைக்கு அடிப்படையாக அமைந்தது" என்று கூறியுள்ளார். முனோத் குழுமம், சீனாவில் இருக்கும் "பெட்டர் பவர் கம்பெனி" என்ற நிறுவனத்துடன் இணைந்து லித்தியம் - இயன் பேட்டரிகளை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது.
முதற்கட்ட பணிகளுக்காக ரூ. 165 கோடியை முதலீடாக வைத்திருக்கின்றது இந்நிறுவனம். இந்திய அரசின் சார்பில் இருந்து கேப்பிட்டல் இன்வெஸ்ட்மெண்ட்டாக ரு. 25 கோடியினை பெற்றிருக்கும் இத்தொழிற்சாலைக்கான அனைத்து தொழில்நுட்ப சலுகைகளையும் உதவிகளையும் ஆந்திர அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. "மேக் இன் இந்தியா திட்டம் மட்டும் இல்லை என்றால் இது போன்ற ஒரு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவுவது என்பது நிறைவேறாத காரியம்" என்று விகாஸ் முனோத் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட்போன்களின் இயக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பேட்டரிகள் தான். இந்தியாவில் 42 மொபைலினை உருவாக்கும் தொழிற்சாலைகளும், 12 பேட்டரி பேக்குகளை உருவாக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. லித்தியம் இயன் பேட்டரிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பெலி செய்யப்படுகின்றது. இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டபின்பு, பேட்டரிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்படாது. மேலும் 2025ற்குள், உள்நாட்டில் உற்பத்தியாகும் செல்போன்களின் எண்ணிக்கை தோராயமாக 1.5 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடியினால் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட "மேக் இன் இந்தியா" திட்டம் நிறைய தொழில் முனைவோர்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. வளர்ந்து வரும் சீனாவின் ஜியோமி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. இந்த நிறுவனம் மிக சமீபத்தில் தன்னுடைய மூன்று தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்க இருப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.