இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரங்கநாத் தன்னுடைய பதவியில் இருந்து விலகுகிறார். எதற்காக பதவி விலகுகிறார் என்ற காரணம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தன்னுடைய பதவியில் நவம்பர் 16ம் தேதி வரை நீடிப்பார் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.
இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி பொறுப்பு
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 2015ம் ஆண்டு தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார் ரங்கநாத்.
இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆன நிலையில் இவர் வேலையை ராஜினாமா செய்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தகவல் தொழில் நுட்பப் பிரிவில் 27 வருடங்கள் அனுபவம் கொண்ட ரங்கநாத் 1991 முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஐசிஐசிஐ நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மட்டும் 18 வருடங்கள் பணியாற்றினார் ரங்கநாத்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
2015 முதல் 2018 வரையிலான இந்த மூன்று வருடத்தில் ரங்கநாத் செய்த சாதனைகள் மிகப் பெரியவை என்பது குறிப்பிடத்தக்கது. 2017 மற்றும் 2018ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் தலைசிறந்த தலைமை நிதி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர்.
18 வருடங்கள் நான் இஃபோசிஸ் நிறுவனத்தில் நான் கற்றுக் கொண்டது மிக அதிகம். தற்போது வேறு புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்கின்றேன் என்று ரகுநாத் இன்ஃபோசிஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஃபைலிங்கில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவரை போனில் அழைத்த போது அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
தன்னுடைய எஞ்சினியரிங் பட்டப்படிப்பினை மைசூர் பல்கலைக்கழகத்திலும், பட்ட மேற்படிப்பினை மெட்ராஸ் ஐஐடியிலும் ரங்கநாத் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.