பொது வருங்கால வைப்பு நிதி (PPF), ரிஸ்க் எடுக்க விரும்பாத சிறு சேமிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் வரிச் சலுகையும் அளிக்கப்படுகிறது.
இது, 1968 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் தற்போது வருடாந்திர வட்டியாக 7.1% வழங்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இருப்பினும், 15 வருட முடிவில் பணம் தேவையில்லை என்றால், PPF கணக்கை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம்.
PPF கணக்கு நீட்டிப்பு படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் ஐந்தாண்டு அதிகரிப்புகளில் இதைச் செய்யலாம். PPF கணக்குகள் முதலீட்டாளர்கள் வருடத்திற்கு 500 ரூபாய் மற்றும் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை பங்களிக்க அனுமதிக்கின்றன.
ஆபத்து குறைவு, வரிச் சலுகை என பல பண்புகளை கொண்டுள்ள இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் கோடீஸ்வரர் கூட ஆகலாம். அதற்கு பிபிஎஃப் கணக்கில் நீங்கள் தினமும் ரூ.417 முதலீடு செய்தால் போதும்.
அந்த வகையில் உங்கள் மாதாந்திர வருமானத்தில் தோராயமாக ரூ.12,500-ஐ முதலீடு செய்ய வேண்டும்.
இது வருடத்துக்கு ரூ.1,50,000 ஆக இருக்கும். இந்தத் தொகை 15 ஆண்டுகளில் ரூ.40.58 லட்சமாக உயரும். தொடர்ந்து திட்டத்தை கூடுதலாக 10 ஆண்டுகள், அதாவது 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்துவந்தால் உங்களுக்கு முதிர்வு தொகை ரூ.1.03 கோடி கிடைக்கும்.
சுருக்கமாக கூறினால் 25 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும். இதற்கு வட்டியாக ரூ.66 லட்சம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்துவதே உத்தமம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“