நம்மிடையே இருக்கும் பல முதலீட்டு திட்டங்களில் சிலவற்றிற்கே மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் அரசின் ஆதரவு பெற்ற சில திட்டங்களுக்கு என்றுமே வரவேற்புண்டு. இதில் குறிப்பாக தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மிக லாபகரமான ஒரு திட்டமாக சம்பளதாரர்கள் கருதுகின்றனர். இது அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓய்வூதிய திட்டமிடலாகும். இந்த சேமிப்பு திட்டம் வரி சேமிப்புக்கும் உதவும் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.
பிபிஎஃப் திட்டம்
நீண்டகால நோக்கங்கள் அல்லது ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீட்டு திட்டம் பிபிஎஃப். ஏனெனில் முதலீட்டிற்கு ஆபத்து இல்லாத ஒரு சிறந்த முதலீடு இது. இந்த 15 ஆண்டுகால திட்டத்தில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
தகுதிகள்
இந்தியரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை தொடங்கலாம். என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங்கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ளலாம். இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும்.
குறைந்தபட்ச பங்களிப்பு எவ்வளவு?
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 தவணைகளாக, உங்களது முதலீட்டு தவணையை செய்து கொள்ளலாம்.
பிபிஎஃப் கணக்கு எப்படி தொடங்குவது?
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தபால் அலுவலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளில் தொடங்கிக் கொள்ளலாம். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். இந்த கணக்கை நீங்கள் ஆன்லைன் மூலமாக எளிதாக தொடங்கலாம். மேலும் நேரடியாக கிளைக்குச் சென்று தொடங்கலாம். இதற்காக அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
மேலும், பிபிஎஃப் கணக்கினை தொடங்க கட்டாயம் ஒரு வங்கிக் கணக்கு வேண்டும். உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள பிபிஎஃப் என்ற ஆப்சனை கிளிக் செய்யலாம். அதில் relevant account மற்றும் minor account என்று காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து, அதில் உங்களது விவரங்கள், நாமினி விவரங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர், உங்களது பான் எண்ணை வெரிபை செய்தபின், நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கும். அதனை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதனை உள்ளிட்டு ஒரு முறை இந்த வெரிபிகேஷன் செய்யப்பட்ட பின்பு, உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கப்படும். சில வங்கிகள் பிபிஎஃப் கணக்கினை தொடங்க ஆவணங்களின் நகல்களை கேட்கின்றன.
பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட பின்னர், உங்களுக்கு தபால் அலுவலகம் அல்லது வங்கிகள் பாஸ்புக்கினை கொடுக்கின்றன. இதன் மூலம் நீங்கள் உங்களது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் இந்த கணக்கினை தொடங்குபவர்கள் ஆன்லைனிலேயே உங்களது இருப்பு மற்றும் மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பிபிஎஃப் கணக்கினை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியுமா?
உங்களது பிபிஎஃப் கணக்கினை ஒரு வங்கி கிளையில் இருந்து, மற்றொரு வங்கி கிளைக்கு மாற்றிக் கொள்ளலாம். அதே போல தபால் அலுவலகத்தின் ஒரு கிளையில் இருந்து, இன்னொரு கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதேநேரம் கணக்கினை தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் மூடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அதன் பிறகு சில காரணங்களின் அடிப்படையில் கணக்கினை மூடிக்கொள்ளலாம். கணக்கு வைத்திருப்பவருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் உள்ளிட்ட சில காரணங்களினால் மட்டுமே மூடிக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் சரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும்.
கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால் என்ன ஆகும்?
ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்களுக்கு கணக்கில் உள்ள சேமிப்பு பணம் கிடைக்கும்.
அடுத்ததாக, உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 ஆம் வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம். உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் திரும்பப் பெற அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
நீட்டிப்பு செய்ய முடியுமா?
பிபிஎஃப் வாடிக்கையாளருக்கு 15 வருட முதிர்வு காலம் முடிவடைந்த பின், நிதி உடனடியாக தேவைப்படாத பட்சத்தில், முதிர்வு காலத்திற்கு பிறகும் கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் 5 ஆண்டு தொகுப்புகளாக மட்டுமே நீட்டிக்க முடியும். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ விண்ணப்பித்து நீட்டித்துக் கொள்ளலாம்.
ரூ.72 லட்சம் வருமானம்
மாதம் சுமார் ரூ.6,000 முதலீட்டின் மூலம், வருடத்திற்கு ரூ.70,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 15 வருட முடிவில் நீங்கள் ரூ.10,50,000 முதலீடு செய்திருப்பீர்கள். பிபிஎஃப் வட்டி விகிதம் தற்போது 7.1% ஆக உள்ளது. அதன் அடிப்படையில் கிடைக்க கூடிய மொத்த வட்டி ரூ.8,48,498. ஆக மொத்தம் 15 வருடம் கழித்து உங்களது மொத்த முதிர்வு தொகை ரூ.18,98,498.
இதே தொகையை அடுத்த 5 வருடங்களுக்கு நீட்டித்தால், 20 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை ரூ. 31,07,201. மேலும் இதனை அடுத்த 10 வருடங்களுக்கு நீட்டித்தால், 30 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை ரூ.72,10,425.
இவ்வாறு உங்கள் முதலீட்டை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிப்பதால் உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ.72 லட்சத்திற்கு மேல் இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.