பொது பங்கு வெளியீடுகள்(ஐபிஓ) மூலம் 2021ஆம் ஆண்டில் நிதி திரட்டுவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 28 நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் ரூ.42,000 கோடி நிதி திரட்டியுள்ளது. SEBIயிடம் தாக்கல் செய்த அல்லது பட்டியலிட விரும்பும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் டிசம்பர் மாத்திற்குள் secondary Market மூலம் இந்த அளவு ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்.
பொது பங்கு வெளியீடு(ஐபிஓ) என்பது ஒரு நிறுவனம் தனது நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு விற்பனை செய்ய முன் வரும் ஒரு நடவடிக்கை. இதனால், அந்த குறிப்பிட்ட நிறுவனம், ஒரு பொது நிறுவனமாக மாறுகிறது. அவர்கள் புதிய பங்கு வெளியீட்டை கொண்டு வந்த உடன் அந்த நிறுவனம் இந்திய பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியம் (SEBI)நிர்ணயித்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை உருவாகும். இவ்வாறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு, புதிய பங்கு வெளியீட்டின் மூலம் முதலீடு திரட்ட முடியும்.
ஐபிஓவில் பங்குகளை வாங்காதவர்கள் அதற்கு பிறகு secondary marketல் வாங்கிக்கொள்ளலாம். ஐபிஓவில் பங்குகளை வாங்கியவர்கள் அந்த பங்கு வேண்டாம் என்றோ அல்லது டிமாண்ட் இருக்கிறது என்றோ நினைத்து பங்குகளை விற்க முன்வருவார்கள். அந்த சமயத்தில் அந்தப் பங்குகளை மற்றவர்கள் வாங்கிக்கொள்ளலாம்
ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப்பங்குகள், இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. தொடர்ந்து Paytm, PhonePe, MobiKwik, Grofers, PolicyBazaar, Flipkart Internet, Delhivery போன்ற நிறுவனங்களும் இந்தாண்டு ஐபிஓக்களை வெளியிட உள்ளது.
ஐபிஓக்கள் மூலம் இத்தகைய பரபரப்பான நிதி திரட்டல் கடைசியாக 2017 ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது 36 நிறுவனங்கள் மூலம் ரூ .67,147 கோடியை திரட்டப்பட்டது. இந்த ஆண்டு, ஏற்கனவே 28 நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் ரூ.42,000 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது. பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, மேலும் 34 நிறுவனங்கள் ஏற்கனவே செபியிடம் சலுகை ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. இதனால் ஐபிஓக்கள் மூலம் ரூ.71,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 54 நிறுவனங்கள் இந்த ஆண்டு முதன்மை சந்தையைத் தட்டுவதற்கான விருப்பத்தை அறிவித்துள்ளன. (முதன்மை சந்தை என்பது முதல் முறையாகப் பங்குகள் market ல் விற்பனைக்கு வரும் சந்தை இடமாகும். இந்த சந்தையில் முதலீட்டாளர் நேரடியாக பொது நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்குகிறார்). அவற்றில் 21 நிறுவனங்கள் ரூ .70,000 கோடிக்கு மேல் திரட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் இல்லை. இது ரூ .10 லட்சம் கோடி முதல் ரூ .15 லட்சம் கோடி வரை மதிப்பிடப்பட்ட மதிப்பீட்டைப் பொறுத்து ரூ.50,000 கோடி அல்லது அதற்கு மேல் திரட்ட முடியும்.
பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரணவ் ஹல்தியா கூறுகையில், "ஒப்பந்தங்கள் முடிவதற்கு சந்தையின் போக்கு நன்றாக இருப்பது மிகவும் முக்கியமானது. நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல் இருந்தாலும், சந்தையில் பங்குகளின் விலை உயர இருந்தால் மட்டுமே நிறுவனம் பங்குகளை வெளியிடும். சந்தையில் சரிவு இருக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் இருந்து விலகும் வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது. 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ரூ.75,000 கோடி மதிப்புள்ள ஐபிஓக்களுக்கு செபி ஒப்புதல் வைத்திருக்கும் நிறுவனங்கள் சந்தைகள் கரடுமுரடானதாக மாறும்போது இவற்றைக் குறைக்க அனுமதித்தன. எனவே பங்குச்சந்தையின் போக்கு முடிவுக்கு முக்கியமாக இருக்கும்" என கூறினார்.
"கொரோனா 3வது அலை பற்றிய கவலைகள் , நீட்டிக்கப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை சந்தை ஐபிஓக்களுக்கான அவசியத்தை காட்டுகிறது. இந்த "வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்பது சில்லறை பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடாகத் தெரிகிறது. முக்கியமானது என்னவென்றால், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தாமதமாக, முதன்மை சிக்கல்களில் சில்லறை பங்கேற்பாளர்களைக் காட்டிலும் அதிக அக்கறை காட்டவில்லை. அவர்கள் ஐபிஓக்களில் தங்கள் முதலீடுகளை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி நான்கு வருட உச்சத்தை எட்டியுள்ளனர், நாங்கள் ஆண்டின் பாதி வழியில் மட்டுமே இருக்கிறோம்" என சாம்கோ செக்யூரிட்டீஸ் ஈக்விட்டி ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் நிராய் ஷா கூறியுள்ளார்.
மேலும், ஓய்வூதிய நிதி முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA) ஓய்வூதிய நிதிகளை தகுதி வாய்ந்த ஐபிஓக்களில் முதவீடு செய்து தங்கள் முதலீட்டை விரிவுபடுத்த பரிசீலத்து வருகிறது. இது பொது பங்கு வெளியீடு முடிவடையாமல் இருப்பதை காட்டுகிறது என ஷா தெரிவித்தார்.
செபி தலைவர் அஜய் தியாகி கூறுகையில், "சொமேட்டோ நிறுவனத்தின் புதிய பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். புல நிறுவனங்களின் ஐபிஓ வெளியாகி வந்தாலும் ஜொமேட்டோ ஐபிஓ முக்கியமானது. இது புதுயுக தொழில்கள் ஆகும். புதிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிக மாதிரியை ஏற்றுக்கொள்வதற்கான சந்தையின் முதிர்ச்சி பொது சலுகைகள் பிரதிபலிக்கின்றன. அவை வழக்கமான லாப அளவீடுகள் மூலம் மதிப்பீடு செய்ய இயலாது. வலுவான வளர்ச்சியுடன், பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டில் பட்டியலிட விரும்புவதால், எங்கள் சந்தைகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் சந்தைகள் எந்தவொரு வெளிநாட்டு சந்தையையும் போலவே கவர்ச்சிகரமான நிதி திரட்டும் அறிவிப்பை வழங்குகின்றன" என என்ஐஎஸ்எம் மூலதன சந்தை மாநாட்டில் கூறினார்.
மேலும், இத்தகைய நிறுவனங்களின் வெற்றிகரமான ஐபிஓக்கள் உள்நாட்டு சந்தைகளில் அதிக நிதியை ஈர்க்க வாய்ப்புள்ளது, இதனால் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களின் புதிய அமைப்பை உருவாக்குகிறது என கூறினார்.
ஜொமேட்டோவுக்கு பிறகு அடுத்த மெகா யுனிகார்ன் (புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பை குறிப்பிடுவதுதான் யுனிகார்ன்.) ஒன் 97 கம்யூனிகேஷன் ஆக இருக்கக்கூடும். இந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் என பல டிஜிட்டல் களங்களில் தன் தடத்தை அழுத்தமாக பதிந்து இருக்கும் நிறுவனம் பேடிஎம். இந்த பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ். இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.16,600 கோடி திரட்ட பேடிஎம் திட்டமிட்டிருக்கிறது. இது இந்தியாவின் பெரிய ஐபிஓ ஆகும்.
பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் வலுவாக வளர்ந்து வருகிறது, அதே நேரத்தில் நஷ்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2019ஆம் நிதி ஆண்டில் ரூ.4,230 கோடி, 2020ஆம் ஆண்டில் ரூ.2,942 கோடி, 2021ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
ஐபிஓவுக்கான அடித்தளத்தை தயாரிக்கும் எல்ஐசி, 2022ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மூலதன சந்தையை எட்ட உள்ளது, இது ரூ.55,000 முதல் ரூ.80,000 கோடி வரை திரட்டக்கூடும்.
கொரோனா பாதிப்பு இருந்தபோதும் மூலதனச் சந்தைகள் மூலம் ஒட்டுமொத்த நிதி திரட்டலை பொறுத்தவரை 2021ஆம் நிதியாண்டில் நிறுவனங்கள் ரூ.10.12 லட்சம் கோடியை திரட்டின. முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்களான ரூ .9.96 லட்சம் கோடியை விட அதிகம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.