IRCTC cancellation charges and TDR filing in Tamil: முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளில், நம்மால் பயணம் செய்ய முடியாவிட்டால், டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
ரயிலில் உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதியுடன் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் ரயிலில் எங்காவது பயணம் செய்ய தீர்மானித்து, ஆனால் திடீரென்று சில காரணங்களால் உங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியிருந்தால், அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டுகளை வாங்குவதற்காக நீங்கள் செலுத்திய மொத்தப் பணத்திலிருந்து ஒரு பெரிய தொகையை இழக்க நேரிடும். எனவே டிக்கெட் ரத்து செய்யும் முடிவை சரியான நேரத்தில் எடுக்க உதவும் வகையில், உங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது கழிக்கப்படும் தொகை பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
ரயிலில் பயணம் செய்பவர்களின் இறுதி பட்டியல் தயாராகும் வரை IRCTCயின் இணையதளத்தில் இ-டிக்கெட்டுகளை நீங்கள் ரத்து செய்யலாம். பெரும்பாலும் ரயில்களுக்கான பயணிகளின் இறுதி பட்டியல், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் தயார் செய்யப்படும். இந்த கால அளவு ரயில்களைப் பொறுத்து மாறுதலுக்குட்பட்டது. இந்த ரத்து கட்டணங்கள் முன்பதிவு செய்யப்பட்ட தொகையில் கழிக்கப்படும். மீதம் உள்ள முன்பதிவு தொகை மட்டுமே உங்களுக்கு திருப்பி வழங்கப்படும்.
பயணிகளின் இறுதி பட்டியல் தயாரித்த பிறகு டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணம்.
TDR தாக்கல்
முன்பதிவு இறுதிபட்டியல் தயாரான பிறகு இ-டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த சூழ்நிலையில் பயணிகள் ஆன்லைனில் TDR தாக்கல் செய்ய வேண்டும். ரயில்வே விதிகளின்படி TDR தாக்கல் செய்யலாம். TDR தாக்கல் செய்வதன் மூலம் உங்களின் முன்பதிவு கட்டணத்தை நீங்கள் திரும்ப பெறலாம். இந்த TDR தாக்கலை ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் செய்ய வேண்டும்.
இதற்கு பயணிகள் IRCTC வழங்கும் கண்காணிப்புச் சேவையின் மூலம் ஆன்லைன் TDR தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதேநேரம், டிக்கெட் ரத்து செய்யப்படாவிட்டாலோ அல்லது திட்டமிடப்பட்ட புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் TDR தாக்கல் செய்யப்படாவிட்டாலோ, உறுதிசெய்யப்பட்ட முன்பதிவுகளுடன் கூடிய டிக்கெட்டுகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.
இதையும் படியுங்கள்: Income Tax Savings: முதலீடே பண்ணலைனாலும் வரி சேமிக்க வழி இருக்கு… இதைப் படிங்க!
மேலும், ரயில் புறப்படுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது ஆன்லைனில் TDR தாக்கல் செய்யாவிட்டாலோ RAC இ-டிக்கெட்டுகளுக்குப் பணம் திரும்பப் பெறப்படாது.
ரயில் பயணிகளின் இறுதி பட்டியல் தயாரிப்பதற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்ய கட்டணம்
ரயில் புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், ஏசி முதல் வகுப்பு/எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு ரூ. 240 மற்றும் ஏசி 2 அடுக்கு/முதல் வகுப்புக்கு ரூ.200, ஏசி 3 டயர்/ஏசி நாற்காலி கார்/ஏசி 3 எகானமி ரூ. 180, ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.120, மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு ரூ, 80. ரத்து கட்டணமாக கழிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்துசெய்தால், ரத்துசெய்யும் கட்டணம் குறைந்தபட்ச முன்பதிவு கட்டணத்தில் 25% ஆக இருக்கும். 12 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலும், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பும், இறுதி பட்டியல் தயாரிக்கும் வரையிலும் ரத்து செய்யப்பட்டால், கட்டணத்தில் 50% வரை பிடித்தம் செய்யப்படும்.
இ-டிக்கெட்டாக முன்பதிவு செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளின் ரத்து கட்டணம்
உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. காத்திருப்புப் பட்டியல்களுடன் கூடிய தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தட்கல் இ-டிக்கெட்டுகள் பகுதியளவில் ரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ரயில் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணம்
வெள்ளம், விபத்துகள் போன்றவற்றால் ரயில் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரயில் புறப்பட வேண்டிய மூன்று நாட்களுக்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil