"மோசடி வேலைகள் 2011லேயே தொடங்கியுள்ளது" - வங்கி மேலாண் இயக்குனர்

வங்கியின் மேலாண் இயக்குனர் சுனில் மேத்தா, தற்போதைய பாதிப்புகளில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மீண்டு வரும். அதற்கான திறன் வங்கியிடம் உள்ளது என்றார்.

ஆர். சந்திரன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த நிதி மோசடி வேலைகள் 2011ம் ஆண்டிலேயே தொடங்கியிருப்பதாகவும், அதை 2018 ஜனவரியில்தான் கண்டுபிடித்தோம் எனவும், இவ்வங்கியின் மேலாண்மை இயக்குனர் சுனில் மேத்தா கூறியுள்ளார். தற்போதைய மோசடி விவரங்கள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 3ம் தேதி இந்த மோசடி குறித்த விஷயம் தங்களுக்கு தெரிய வந்தது எனவும், அடுத்த சில நாட்களில் இது குறித்து வங்கி மட்டத்தில் முழுமையாக விசாரிக்கப்பட்டது எனவும், ஜனவரி 29ம் தேதி சிபிஐயிடம் புகார் அளித்து, மறுநாள் முதல் தகவல் அறிக்கை பதிவானது என்றும் கூறியுள்ளார். எனினும், நிரவ் மோடி மீது சிபிஐயிடம் வங்கி சார்பில் புகார் அளிப்பதற்கு 6 நாட்கள் முன்பு, அதாவது ஜனவரி 23 அன்று மத்திய அரசின் செய்தித்துறை சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன், இந்திய தொழிலதிபர்கள் பலரோடு நிரவ் மோடியும், தாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள வந்த குழுவோடு இடம்பெற்றிருந்தார்.

மறுபுறம், நிரவ் மோடி தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க குடியுரிமை பெற்றவரான நிரவ் மோடியின் மனைவி ஜனவரி 6ம் தேதியே இந்தியாவில் இருந்து சென்றுவிட்டதாகவும், இந்த மோசடியில் நிரவ் மோடியுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது சகா மெஹுல் சொக்ஸி ஜனவரி 4ம் தேதியும், பெல்ஜியம் நாட்டின் குடிமகனான, நிரவ் மோடியின் சகோதரர் நிஷால் மோடி ஜனவரி 1ம் தேதியும் இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோசடி குறித்து மேலும் பேசிய வங்கியின் மேலாண் இயக்குனர் சுனில் மேத்தா, தற்போதைய பாதிப்புகளில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மீண்டு வரும் எனவும், அதற்கான திறன் வங்கியிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, வங்கி அளித்த புகாரையொட்டி, மோசடியில் தொடர்புள்ளவர்கள் சார்ந்த பல இடங்களில் சோதனை நடப்பதாகவும் அதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இதைத் தொடர்ந்து வங்கியின் நலனைப் பாதுகாக்க பல நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close