/indian-express-tamil/media/media_files/2025/09/17/itr-filing-2025-2025-09-17-18-16-56.jpg)
ITR filing 2025: Missed the deadline? Now file belated ITR – know penalty and last date
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான (ITR filing) அவகாசம், இந்த ஆண்டு பலமுறை நீட்டிக்கப்பட்டும், பல லட்சக்கணக்கான மக்கள் அதை உரிய நேரத்தில் தாக்கல் செய்யத் தவறிவிட்டனர். முதலில் மே மாதத்தில் 46 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ஒருநாள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 16 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. எனினும், ஒரு சிலரால் உரிய நேரத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய இயலவில்லை. இப்போது, அவர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி, "காலக்கெடுவைத் தவறவிட்டவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?" என்பதுதான்.
தாமதமாக தாக்கல் செய்யலாம்!
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியவர்கள், இப்போது தாமதமான வருமான வரிக் கணக்கு (Belated ITR) மூலம் தாக்கல் செய்யலாம். வருமான வரித்துறை இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு, டிசம்பர் 31, 2025 வரை தாமதமான வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். எனவே, உங்களுக்கான வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. ஆனால், இதற்கு சில நிபந்தனைகளும், அபராதங்களும் உண்டு.
தாமதமான ITR மற்றும் திருத்தப்பட்ட ITR - இரண்டும் ஒன்றா?
பலருக்கு, தாமதமான ITR (Belated ITR) மற்றும் திருத்தப்பட்ட ITR (Revised ITR) ஆகியவற்றுக்கு இடையே குழப்பம் ஏற்படுகிறது. ஆனால், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை.
தாமதமான ITR: உரிய காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்கு. இதைச் செய்ய நீங்கள் தாமதக் கட்டணமும், அபராதமும் செலுத்த வேண்டும்.
திருத்தப்பட்ட ITR: சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்தவர்கள், அதில் ஏதேனும் தவறு அல்லது விடுபட்ட தகவல்கள் இருந்தால், அதை சரிசெய்வதற்காக மீண்டும் தாக்கல் செய்வது. Revised ITR-ஐயும் நீங்கள் டிசம்பர் 31, 2025 வரை தாக்கல் செய்யலாம்.
டிசம்பர் 31-ம் தேதியையும் தவறவிட்டால் என்ன நடக்கும்?
செப்டம்பர் 16 காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டு, வரும் டிசம்பர் 31, 2025-க்குள் கூட வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை என்றால், நிலைமை உங்களுக்கு மிகவும் கடினமாகலாம். வருமான வரித்துறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரக்கூடும். அதோடு, சில வரிச் சலுகைகளையும் நீங்கள் இழக்க நேரிடும். எனவே, தாமதமான ITR-ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வது மிக முக்கியம்.
தாமதமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தால் அபராதம் உண்டா?
ஆம், உண்டு! சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறுபவர்கள் தாமதக் கட்டணத்தை (late filing fee) செலுத்த வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F-ன் படி:
வருமானம் ₹ 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், ₹ 5,000 அபராதம் செலுத்த வேண்டும்.
வருமானம் ₹ 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள், ₹ 1,000 அபராதம் செலுத்த வேண்டும்.
அபராதத்துடன் சேர்த்து, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான வட்டியையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது ஏன் அவசியம்?
இந்த ஆண்டு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை புதிய சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் 16-ம் தேதி வரை 7.53 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும், பல லட்சக்கணக்கானோர் கடைசி நேரத்தில் தாக்கல் செய்யத் தவறிவிட்டனர்.
வருமான வரிக் கணக்கு உரிய நேரத்தில் தாக்கல் செய்வது, அபராதம் மற்றும் வட்டி செலுத்துவதில் இருந்து தப்புப்பது மட்டுமல்லாமல், இது ஒரு முக்கியமான ஆவணமாகவும் திகழ்கிறது. வருமானச் சான்று, வங்கிக் கடன் ஒப்புதல் மற்றும் விசா செயல்முறைகள் போன்ற விஷயங்களுக்கும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் ஒரு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை. அபராதத்துடன் கூடிய தாமத ITR தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை நீங்கள் இன்னும் பயன்படுத்திக்கொள்ளலாம். சரியான நேரத்தில் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து, வருமான வரித்துறையின் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.