அமெரிக்கா கை விட்டால் என்ன? ஜப்பான் கை கொடுக்கிறது. ஐடி துறையினருக்கு வாய்ப்பு

ஜப்பான் நாட்டுக்கு உடனடியாக 2 லட்சம் ஐடி துறை பயிற்சி பெற்ற தகுதியான நபர்கள் தேவை எனவும், 2030க்குள் 8 லட்சம் பேர் தேவை எனவும்...

ஆர்.சந்திரன்

“டொனால்ட் டிரம்ப் நடவடிக்கையால், இந்திய ஐடி துறையினருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு குறைந்தால் என்ன… ஜப்பானில் ஏராளமாக உள்ளன. ஜப்பானுக்கு வருவோருக்கு நாங்கள் ஏராளமான சலுகைகளை அளிக்கவும் தயாராக இருக்கிறோம்” என ஜப்பானிய வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் ஷிஜிகி மவ்தா கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் இந்திய ஐடி துறையினருக்கு மவுசு இருந்தாலும், டொனால்ட் டிரம்பு அமெரிக்க அதிபரான பிறகு, உள்ளூர் மக்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தால், இந்தியர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் நாட்டுக்கு உடனடியாக 2 லட்சம் ஐடி துறை பயிற்சி பெற்ற தகுதியான நபர்கள் தேவை எனவும், 2030க்குள் 8 லட்சம் பேர் தேவை எனவும் மவ்தா கூறியுள்ளார்.

பெங்களுருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த 2 லட்சம் பேரை பெருவாரியாக உயிரியல், நிதி, சேவை மற்றும் வேளாண்மை போன்ற துணைப் பிரிவுகளில் எதிர்பார்ப்பதாகவும், ஹைதராபாத் நகர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஓராண்டு நிறைவுக்குள் நிரந்தரமாக ஜப்பானில் தங்கும் கிரின் கார்ட் வசதியை அந்நாட்டு அரசு தர உள்ளது எனவும், ஜனவரி 2018ல் தொடங்கி இந்தியாவில் இருந்து வரும் நபர்களுக்கு விசா வழங்குவதில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் மவ்தா குறிப்பிட்டுள்ளார். அதேபோல, ஓராண்டில் இருமுறை ஜப்பான் வந்த நபருக்கு, அடுத்த பயணம் செய்ய பாஸ்போர்ட்டும, விசா விண்ணப்பமும் இருந்தாலே போதும் என்பது உள்ளிட்ட, அந்நாட்டின் பல திட்டங்களையும் விளக்கியுள்ளார்.

×Close
×Close