பிரபல அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை இந்த ஆண்டு முதல் நிறுத்தியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு 1894ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன்.
இந்த நிறுவனத்தின் குழந்தை பவுடர் உலகளவில் பெயர் பெற்றது. இந்த நிலையில் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்று விரிவாக எழுதியிருந்தது.
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் கல்நார் என்ற அஸ்பேஸ்டோஸ் இருப்பதாக வலுவான குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருள்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் பல்வேறு இடங்களில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 38 ஆயிரம் வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் தொடர்ந்து மறுத்துவந்தது. இந்த நிலையில் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடர்ச்சியாக போடப்பட்ட நிலையில் நிறுவனம் விற்பனையை கைவிடும் முடிவை எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது விற்பனையை நிறுத்துவது, வழக்குகள் மற்றும் இழப்பீடுகளால் பெரிதளவு நஷ்டம் ஏற்பட்டதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil