/indian-express-tamil/media/media_files/2025/10/10/pooja-lottery-bumper-2025-10-10-05-10-38.jpg)
இந்த பூஜா பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ரூ.25 கோடிக்கான ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கள் முடிந்த நிலையில், பரிசு அடிக்காதவர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்படி ஏமாற்றத்தில் இருப்பவர்களுக்கு இதோ இன்னொரு வாய்ப்பு என்கிற வகையில், கேரளா அடுத்த பம்பர் லாட்டரியை இறக்கியுள்ளது. இந்த பூஜா பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜா பம்பர் லாட்டரி விற்பனை, குலுக்கல் தேதி எப்போது என்ற முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 2004-ம் ஆண்டு முதல் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குள் லாட்டரி விற்பனை செய்வது சட்டவிரோதமானது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. லாட்டரி என்பது அதிர்ஷ்டத்தைப் பொருத்துதான். அதிர்ஷ்டம் இருந்தால், பெரிய தொகை அடிக்கலாம். இல்லாவிட்டால் லாட்டரி டிக்கெட் வாங்கிய பணம் இழப்புதான். லாட்டரி தடை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திர பிரதேசத்திலும் லாட்டரிகளுக்கு தடை உள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவில் கேரளா, அருணாசல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி அரசு அனுமதியுடன் கொடிகட்டிப் பறக்கிறது. இவற்றில் கேரளா லாட்டரி மிகவும் பிரபலமாக உள்ளது.
கேரளாவில் தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.50. இதற்கு முதல் பரிசு ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. கேரளாவில் தினமும் லாட்டரி குலுக்கப்படுவதால், தினமும் யாரோ ஒருவர் கோடீஸ்வர் ஆகிறார். அதே நேரத்தில் பல ஆயிரக் கணக்கானோர் அதிர்ஷ்டம் இல்லாமல் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.
கேரளாவில் தினமும் ரூ.1 கோடி பரிசுக்கான லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது மட்டுமில்லாமல், பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் ஆண்டுக்கு 6 விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 4-ம் தேதி ஒணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது.
இந்த ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.25 கோடி. இவ்வளவு பெரிய தொகை யாருக்கு அடிக்கப்போகிறதோ என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கேரளாவில் நெட்டூரை சேர்ந்த சரத் நாயர் என்ற பெயிண்ட் கடை ஊழியருக்கு முதல் பரிசுத்தொகை அடித்தது. அதுவும் அவர் தனது வாழ்க்கையில் ஓணம் பம்பர் லாட்டரியை முதல் முறையாக வாங்கியிருக்கிறார். முதல் முறையிலேயே ரூ.25 கோடி அடித்ததால், அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால், இதற்கான லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500 என்பதால், லட்சக் கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், தங்களுக்கும் இப்படி ஒரு பம்பர் பரிசுத் தொகை அடிக்காதா என்ற எதிர்பார்ப்பில் பலரும் காத்திருந்த நிலையில், கேரளா பூஜா பம்பர் லாட்டரி இறக்கியுள்ளது. அக்டோர்பர் 4-ம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கல் அன்று பூஜா பம்பர் டிக்கெட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். இந்த பூஜா பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைக்கும். பூஜா பம்பர் லாட்டரியை பொறுத்தவரை மொத்தம் 5 சீரியஸ்களில் விடப்படுகிறது.
பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் முதல் பரிசு ரூ.12 கோடி. இது போக இரண்டாவது பரிசு 5 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படுகிறது.
அதாவது பூஜா பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.12 கோடி இரண்டாவது பரிசு ரூ.1 கோடி (5 டிக்கெட்டுகளுக்கு) மூன்றாவது பரிசு: ரூ.5 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு) நான்காவது பரிசு: ரூ.3 லட்சம் (5 டிக்கெட்டுகளுக்கு) 5 வது பரிசு: ரூ.2 லட்சம் (தலா 5 டிக்கெட்டுகளுக்கு) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், ரூ.5 ஆயிரம், ரூ.500, ரூ.300-க்கான பரிசுத்தொகையும் உள்ளது. இந்த பூஜா பம்பர் லாட்டரிக்காக மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட உள்ளன. இந்த பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நவம்பர் மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது. அதனால், கேரளாவில் மக்கள் பம்பர் லாட்டரியை வாங்க பறந்துகொண்டிருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.