இந்திய தபால் துறையில் கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டம் கிஷான் விகாஸ் பத்ரா. இதனை செல்வ மகன் சேமிப்பு திட்டம் என்றும் தற்போது அழைக்கிறார்கள்.
இது முதலில் 1988 இல் இந்திய தபால் மூலம் தொடங்கப்பட்ட , இத்திட்டம் தற்போது நாடு முழுக்க உள்ள தபால் நிலையங்களில் கிடைக்கிறது.
இந்தத் திட்டம் பல்வேறு நன்மைகள் மற்றும் அம்சங்களுடன் வருகின்றது. இது, நீண்ட கால முதலீடுகளுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.
கிசான் விகாஸ் பத்ரா: முக்கிய அம்சங்கள்
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தை (KVP) ஆன்லைனில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வாங்கலாம்.
இதனை காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலமும் வாங்கலாம்.
இந்தத் திட்டத்தின்கீழ் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி 30 மாதங்களுக்குப் பிறகு (2.5 ஆண்டுகள்) கிடைக்கும்.
இந்தச் சான்றிதழை பிணையமாகவோ அல்லது கடனுக்கான பாதுகாப்பாகவோ பயன்படுத்தலாம்.
மேலும், சான்றிதழ்களை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றவும் முடியும். இருப்பினும், தபால் அலுவலகம் அல்லது வங்கி அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே இடமாற்றம் நடக்கும்.
கிஷான் விகாஸ் பத்ரா வட்டி
கிசான் விகாஸ் பத்திரத்திற்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில், 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு
முதலீட்டாளர்கள் தங்கள் கிசான் விகாஸ் பத்ரா கணக்குகளை குறைந்தபட்ச வைப்புத் தொகையான ரூ. 1,000 உடன் திறக்கலாம், அதே நேரத்தில் முதலீட்டுத் தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. சான்றிதழ்கள் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.50,000 ஆகிய மதிப்புகளில் கிடைக்கும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்வதற்குக் கருத்தில் கொள்ள வேண்டிய சில தகுதி காரணிகள் உள்ளன:
1. முதலீட்டாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2 . விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
3. இந்து பிரிக்கப்படாத குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் (HUFs) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIகள்) இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தகுதியற்றவர்கள்.
திட்டம் தொடங்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் கிசான் விகாஸ் பத்திரத்தை வாங்கும் போது பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்.
1. ஆதார் அட்டை/பான்/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்/பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல் போன்ற KYC செயல்முறைக்கான அடையாளச் சான்று.
2. முறையாக நிரப்பப்பட்ட KVP விண்ணப்பப் படிவம்
3. முகவரி சான்று
4. பிறப்புச் சான்றிதழ்
வரி பயன்கள்
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தை பணமாக்கும்போது மூலத்தில் (டிடிஎஸ்) வரி விலக்கு இல்லை என்றாலும், வருமானம் வரிக்கு உள்பட்டது. முதலீட்டாளர்கள் திரட்டப்பட்ட வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“