ஜிஎஸ்டி பதிவு எண் எப்போது ரத்து செய்யப்படும்?
தொடர்ந்து 6 வரித் தாக்கல் செய்யாவிட்டால் ஜிஎஸ்டி பதிவு எண் ரத்து செய்யப்படும். விற்பனையில்லா காலத்திலும் பதிவு பெற்ற நபர் வரித்தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
விநியோகத்திற்கு முன்பாக பொருட்கள் சேதமடைந்தால் வரியிலிருந்து தள்ளுபடி அளிக்கப்படுமா?
வரி செலுத்தப்பட வேண்டியிருந்தால் மட்டுமே வரி தள்ளுபடி அளிக்கப்படும். அதாவது, விநியோகத்திற்கு முன்பாக சேதமடைந்தால் வரி செலுத்த வேண்டிய நிகழ்வு ஏற்படாது. ஆகையால் தள்ளுபடி கிடையாது.
சரக்கு குறியீட்டு எண் ஏன் அவசியம்?
எந்தப் பொருளுக்கு என்ன வரி என்பதை எளிதில் கண்டுபிடிக்கவும், செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதனைக் கண்டறியவும் கொண்டு வந்துள்ள நடைமுறையே சரக்கு குறியீட்டு எண் (HSN). இக் குறியீடு மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் தனித்துவம் அடையாளம் காணப்படும்.
சோதனைச் சாவடியில் மின்னணு ரசீது என்றால் என்ன?
ரூ.50,000-க்கு மேல் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கணிணி மூலம் மின்னணு ரசீது எடுத்துச் செல்ல வேண்டும். இதனை பயன்படுத்தும் போது சோதனைச் சாவடிகளில் சோதனைகள் குறையும். மாநில எல்லைகளில் சோதனை சாவடிகளில் நெடு நேரம் காத்திருக்க தேவையில்லை. ஆனால், பறக்கும் படை, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களை கண்காணிக்க வாய்ப்புள்ளது.