நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஜிஎஸ்டி குறித்த பல்வேறு சந்தேகங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் தீர்ந்தபாடில்லை. எனவே, ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களையும், அதுகுறித்த வல்லுனர்களின் விளக்கங்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
ஜிஎஸ்டி சட்டத்தின்படி யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்?
ஜிஎஸ்டி சட்டப்படி சரக்கு வழங்குதல் அல்லது சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டியவை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரின் ஆண்டு மொத்த பரிவர்த்தனை ரூ.20 லட்சத்துக்கு மேலாக இருக்கும்பட்சத்தில் தானாக முன்வந்து அவர் பதிவு செய்ய வேண்டும். அது தவிர இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவின்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வர்த்தகம் செய்பவர்களின் ஆண்டு பரிவர்த்தனை ரூ.10 லட்சத்துக்கு மேலாக இருந்தாலே பதிவு செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி சட்டத்தின்படி யாரெல்லாம் பதிவு செய்ய தேவையில்லை?
தான் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயி பதிவு செய்ய வேண்டியதில்லை. தவிர ஜிஎஸ்டி சட்டத்தின்படி வரியில்லாத பொருட்களை அல்லது மொத்தமும் வரி விலக்கு அளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைத்து வர்த்தகத்தையும் பதிவின்கீழ் கொண்டு வருவதை ஜிஎஸ்டி அறிவுறுத்துகிறது.