ஆம். இப்படி ஒரு கேள்வி தற்போது எழுந்துள்ளது நிஜம்தான். பே-டிஎம், மொபிகுவிக், ஓலா மணி, அமெஸான் பே, உள்ளிட்ட இன்னும் பலவும், சில்லறை விற்பனையின்போது செலுத்தும் சிறுதொகைக்கு நாளை முதல் சேவையளிக்க இயலாத நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்டுமென்ட்ஸ் (PPIs) பெயரில் செயல்படும் இவற்றின் டிஜிட்டல் பர்ஸ்க்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு சேமித்து வைத்திருந்தால், அதிலிருந்து ஹோட்டல், பிற சில்லறை விற்பனைக்கடைகள் என, எதிலும் பொருட்களை வாங்கிக் கொண்டு, இந்த இ-வேலட்டில் இருந்து பணம் செலுத்தும் வசதி தற்போது பரவலாக உள்ளது. அன்றாடம் வளர்ந்து கொண்டும் உள்ளது.
ஆனால், இதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் போல, தங்களது முழு விபர அறிக்கையை (KYC) தாக்கல் செய்ய வேண்டும் என, இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு கெடு நாளாக பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளை, அதாவது இன்றைய தினத்தை அறிவித்து இருந்தது. எனவே, இன்று நள்ளிரவுக்குமுன் இந்த முழு விவர அறிக்கையை தாக்கல் செய்யாதவர்கள், இந்த வாலட்டைப் பயன்படுத்த இயலாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வகை டிஜிட்டல் பர்ஸ்-ல் பணத்தை வைத்திருந்து செலவிடும் முறையில் மாதந்தோறும் புழங்கும் தொகை 12,000 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. எனவே, இந்த தொகை, தற்போது நடக்கும் டிஜிடடல் பண மரிமாற்ற முறையில் இருந்து, மீண்டும் ரொக்கப் பாதைக்கு திரும்பிவிடும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. காரணம், சில்லறை விற்பனையில் செய்யப்படும் சொச்ச செலவுகளுக்காக யாரும் தங்களைது பின்னணி, வாழ்நிலை உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை என பிபிஐ நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ரொக்கப் பண பரிமாற்றத்தைத் தவிர்த்து, அதை முறையாக அனுமதிக்கப்பட்ட வழிகளில் மாற்றுவதன் மூலம் கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கலாம் என கருதி, அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் இந்த முடிவு மத்திய அரசின் அடிப்படை எண்ணத்துக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.