எல்&டி நிறுவனத் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முன்னணி பொறியியல் நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ, தலைமையகத்தில் உள்ள தனது பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவு மூலம் சுமார் 5,000 பெண் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சர்வதேச மகளிர் தின நிகழ்வின் போது அந்நிறுவன தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் அறிவித்தார். இந்த நடைமுறை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள், நிறுவனத்தின் தலைமையால் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த அறிவிப்பு எல்&டியின் தாய் நிறுவன ஊழியர்களுக்குப் பிரத்தியேகமானது. நிதிச் சேவைகள் அல்லது தொழில்நுட்பத் துறைகளில் அதன் துணை நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. எல்&டி நிறுவனம் சுமார் 60,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது. இதில், சுமார் 9 சதவீதம் பெண்கள் உள்ளனர்.
முன்னதாக இந்நிறுவன தலைவர் சுப்பிரமணியனின் கடந்த கால பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஊழியர்கள் ஒரு வாரத்தில் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என அவர் கூறினார். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை என அவர் கூறியிருந்தார். இது போன்ற பேச்சுகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் மாதவிடாய் விடுப்புக் கொள்கைகள் வேகம் பெற்று வருகின்றன. 2024 ஆகஸ்டில் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இத்தகைய கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஒடிசா திகழ்ந்தது. இலவச மாதவிடாய் சுகாதார பொருட்களுடன், பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் ஆறு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் வரைவு மசோதாவை கர்நாடகா பரிசீலித்து வருகிறது.
எல்&டி-யின் இந்த நடவடிக்கை, பணியிடத்தில் பெண்களின் சுகாதாரத் தேவைகளை அங்கீகரிப்பதில் வளர்ந்து வரும் போக்கைப் பிரதிபலிக்கிறது. பல நிறுவனங்கள் ஒரே மாதிரியான கொள்கைகளை ஏற்றுக்கொள்வதால், கார்ப்பரேட் சூழலில் பாலினம் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை இது உயர்த்திக் காட்டுகிறது.