கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கம், ஓரிசா உள்ளிட்ட மாநிலங்களில் சிட் ஃபண்ட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த சில நிதி நிறுவனங்கள் செய்த மோசடி, மீண்டும் நடக்காமல் தடுக்க, தற்போதைய சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதற்கான வரைவு அறிக்கைக்கு இன்று ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதன்படி, சிட் ஃபண்ட்கள் முறைபடுத்தல் சட்டத் திருத்தம் 2018, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த சட்ட வரைவுக்கு அங்கிகாரம் கிடைத்து நடைமுறைக்கு வந்தால், தற்போது முறையாக சிட் ஃபண்ட் நடத்தும் சிலர் சந்திக்கும் சிரமங்களும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மறுபுறம், சாமானிய மக்களுக்கு தங்களது சேமிப்பை சிறிதுசிறிதாக சேமிக்க பாதுகாப்பான வாய்ப்புகள் எற்படும்.
இதன்படி, சிட் தொகை ஏலத்தின்போது குறைந்தது 2 பங்குதாரர்களாவது நேரடியாக இல்லாவிட்டாலும், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் கலந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிட் நடத்தும் நபரது கமிஷன் தொகை, இச்சட்டத்தின் ஆரம்ப கால்த்தில் முடிவான 5 சதவீதம் என்ற அளவில் இருந்து, இப்போது 7 சதவீதம் என உயர்த்த அனுமதிக்கப்படும். மறுபுறம் சிட் பண்ட சட்டம் மத்திய மற்றும் மாநில அரசு என இருதரப்பும் சட்டமியற்றும் வாய்ப்பு கொண்டது என்பதால், மாநில அரசுகள் சட்டமியற்றவும் சில வாய்ப்புகள் விடப்பட்டுள்ளன.
இதன்படி, ஏலக் கேட்டு வரம்பு போன்ற பலவும் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகளால் முடிவு செய்யப்படும் எனவும் இந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.