இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன காப்பீடு முதலீட்டாளரான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) அதானி நிறுவன முதலீடு தொடர்பாக திங்கள்கிழமை (ஜன.30) விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “எல்ஐசியின் மொத்த முதலீடுகளான 41 லட்சம் கோடியில், அதானி குழுமத்தில் 0.975 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “கடந்த பல ஆண்டுகளாக வாங்கிய அதானி குழும நிறுவனப் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.30,127 கோடி” என்று எல்ஐசி தெளிவுபடுத்தியுள்ளது. தொடர்ந்து, இது ஜனவரி 27ஆம் தேதியின் இறுதி விலையின் அடிப்படையில் ரூ.56,142 கோடி சந்தை மதிப்பு ஆகும் எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, அதானி குழுமத்தில் எல்ஐசியின் இந்த முதலீடு, நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துகளில் (AUM) 0.975 சதவீதமாகும்.
அதானியின் அனைத்து கடன் பத்திரங்களின் கிரெடிட் ரேட்டிங்கும் ‘AA’ மற்றும் அதற்கு மேல் உள்ளன. எனவே அதன் முதலீடுகள் IRDAI (Insurance Regulatory and Development Authority of India) வழிகாட்டுதல்களுடன் இணங்குகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியான நிலையில், அதானி பங்குகள் கடந்த சில நாள்களாக சரிந்தன.
இந்த நிலையில், எல்ஐசி குறித்தும் வதந்திகள் பரவின. இதற்கிடையில் எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/