எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC) 14 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விலையை ₹3.50 உயர்த்தியுள்ளன.
மே 19 வியாழன் அன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை, 3.50 ரூபாய் அதிகரித்து ரூ.1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், எல்பிஜி சிலிண்டர்களின் விலை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், ஒரு சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,000-ஐ தாண்டியுள்ளதாக செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது.
இந்த உயர்வால், டெல்லி மற்றும் மும்பையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1003 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1029 ஆகவும், சென்னையில் ரூ.1018.5 ஆகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டில், டெல்லியில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 809ல் இருந்து ரூ. 1,003 ஆக உயர்ந்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
முன்னதாக மே 7ம் தேதி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. வீட்டு சிலிண்டருடன், வர்த்தக சிலிண்டரின் விலையும் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 8 உயர்ந்து ரூ. 2,507க்கு விற்பனை செய்யப்படுகிறது
டெல்லியில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் இப்போது ரூ. 2,354க்கு விற்கப்படுகிறது; இது கொல்கத்தாவில் ரூ.2,454, மும்பையில் ரூ.2,306, சென்னையில் ரூ. 2,507 ஆக உள்ளது.
மே 1ம் தேதி, 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.102.50 அதிகரித்து ரூ.2,355.50 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“