குக்கிராமம் என்றதுமே நம் கண் முன்னே வருவது வயல்வெளிகள், மண் குடிசைகள், மாட்டுக் கொட்டகைகள், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் பெண்கள் என எளிமையான, அமைதியான கிராமப்புற வாழ்க்கை. ஆனால், இந்தியாவில் ஒரு கிராமம் இருக்கிறது. அது இந்த கற்பனைகளை எல்லாம் தலைகீழாக மாற்றி, ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயர் மதாபர். இது உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நம்பமுடியவில்லையா? இங்குள்ள ஒவ்வொரு வீடும் லட்சாதிபதியோ அல்லது கோடீஸ்வரரோ ஆவார்கள். இந்தக் கிராமத்தில் இருக்கும் 17 வங்கிகளில் மொத்தமாக ரூ.5,000 கோடிக்கு மேல் பணம் வைப்புநிதியாக இருக்கிறது. இது சிறிய நகரத்தின் பொருளாதாரத்தைவிட அதிகம்.
சுமார் 92,000 பேர் வாழும் இந்த கிராமத்தில், 7,600 குடும்பங்கள் உள்ளன. இங்கு வங்கிகளுக்குச் சென்றால், கூட்ட நெரிசலில் திணறுவதற்குப் பதிலாக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், எப்படி இந்த கிராமம் இவ்வளவு பெரிய பணக்கார கிராமமாக மாறியது? இதன் ரகசியம் வெளிநாடுகளில் இருக்கிறது. ஆம், மதாபர் கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்களின் உறுப்பினர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் என உலகின் பல பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கு கடினமாக உழைத்து கோடிகளைச் சம்பாதித்த இந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), தங்கள் வேர்களை மறக்கவில்லை.
தாங்கள் ஈட்டிய செல்வத்தில் ஒருபகுதியை, தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல், கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் செலவு செய்கிறார்கள். பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் மற்றும் சாலை வசதிகள் என அனைத்துக்கும் வாரி வழங்குகிறார்கள். அவர்களின் பணம் கிராமத்தின் இரத்த ஓட்டத்தைப் போலப் பாய்ந்து, மதாபரை ஒரு நவீன கிராமமாக மாற்றியிருக்கிறது.
12-ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தக் கிராமம், கோவில்கள் கட்டிய மிஸ்திரி சமூகத்தினரின் உழைப்பால் உருவானது. இங்குள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் என அனைத்தும் நகரங்களுக்கு இணையான வசதிகளுடன் உள்ளன. பணம் மட்டும் கிராமத்தை பணக்கார கிராமமாக மாற்றவில்லை, ஒற்றுமை உணர்வும், சமூகத்தின் மீது கொண்ட பற்றும்தான் இதனை முன்மாதிரியாக மாற்றி உள்ளது.