Mahila Samman scheme: புதிதாக தொடங்கப்பட்ட மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (MSSC) இதுவரை 8,630 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 14,83,980 கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், எந்த வயதுப் பெண்களும் குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதிகபட்சமாக ரூ. 200,000 வைப்புத் தொகையுடன் இரண்டு ஆண்டுகளுக்கு கணக்குகளைத் தொடங்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.5% ஆகும், இது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த தபால் துறை, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் நான்கு தனியார் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2,96,771 பெண்கள் ரூ.1,560 கோடி டெபாசிட் செய்து கணக்கு தொடங்கியுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
977 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத்தொகையுடன் 255,125 கணக்குகள் திறக்கப்பட்டு தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் கர்நாடகா 105,134 கணக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது, இது 2024 நிதியாண்டில் இதுவரை ரூ.639 கோடி டெபாசிட்களைப் பதிவு செய்துள்ளது.
அதேநேரத்தில், புதுப்பிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் வசூல் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 176% உயர்ந்து ரூ.55,000 கோடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“