மத்திய பட்ஜெட்டில் வரி தொடர்பான பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் ஆகியவற்றை எளிமையாக மாற்றியது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். பொதுவான வரி செலுத்துவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வரி இணக்கத்தை எளிதாக்குவது மற்றும் தேவையற்ற சிக்கல்களை அகற்ற இது பயன்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த மாற்றங்கள் வரி செலுத்துவோர், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல், பெரிய அளவில் கொள்முதல் செய்தல் அல்லது வணிகப் பரிவர்த்தனைகள் போன்றவற்றில் எளிமையான நடைமுறையை உறுதி செய்யும். இம்முறை பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
டி.டி.எஸ்-ன் புதிய வரம்புகள்
வங்கியில் இருந்து வட்டி பெறும்போது, வாடகை செலுத்தும்போது அல்லது பெரிய அளவில் பணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட வரம்புக்குப் பிறகு டி.டி.எஸ் கழிக்கப்படும். இந்த பட்ஜெட்டில், இந்த வரம்புகளை சீரமைக்க முன்மொழியப்பட்டுள்ளது, இது உங்கள் வரி விலக்குகளை எளிதாக்கி, பணப்புழக்கம் சிறப்பாக இருக்க அனுமதிக்கிறது.
வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் சலுகை: இப்போது டி.சி.எஸ் இல்லாமல் ரூ.7 லட்சத்திற்கு பதிலாக ரூ.10 லட்சம் வரை அனுப்பலாம்
குழந்தைகளின் கல்விக்காகவோ, குடும்பச் செலவுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ நீங்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால், இப்போது உங்களுக்கு ஒரு சலுகை கிடைக்கிறது.
முன்னதாக, ரூ.7 லட்சத்துக்கும் அதிகமான தொகையை அனுப்பினால் டி.சி.எஸ் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இந்த வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி கல்விக்கடன் மூலம் பணம் அனுப்பினால், அதற்கு டி.சி.எஸ் வசூலிக்கப்படாது. இது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும்.
வர்த்தகர்களுக்கு நல்ல செய்தி: ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையில் டி.சி.எஸ் ரத்து
நீங்கள் வணிகம் செய்து பெரிய விற்பனையைப் பெற்றிருந்தால், இப்போது ரூ. 50 லட்சத்திற்கு மேல் விற்பனையில் 0.1% டி.சி.எஸ்-ஐக் கழிக்க வேண்டியதில்லை.
ஏப்ரல் 1, 2025 முதல், இந்த விதி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இது வணிகர்களுக்கு சிறந்த பணப்புழக்கத்தை அளிக்கும். மேலும், வரி இணக்கத்தை எளிதாக்கும்.
இதுவரை, ஒருவர் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை என்றால், டி.டி.எஸ்/டி.சி.எஸ் அவரிடமிருந்து அதிக விகிதத்தில் கழிக்கப்பட்டது.
2025 பட்ஜெட்டில் இந்த விதியை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் இப்போது பொதுவான வரி செலுத்துவோர் மற்றும் சிறு வணிகர்கள் தேவையற்ற உயர் வரி விகிதங்களில் இருந்து நிவாரணம் பெறுவார்கள்.
இதுவரை, ஒரு நபர் டி.சி.எஸ் தொகையை அரசாங்கத்திடம் சரியான நேரத்தில் டெபாசிட் செய்யவில்லை என்றால், அவர் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இப்போது, இந்த விதி பட்ஜெட் 2025 இல் திருத்தப்பட்டுள்ளது. இதனால் நிலுவையில் உள்ள டி.சி.எஸ், குறிப்பிட்ட காலத்திற்குள் டெபாசிட் செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எதுவும் இருக்காது.