சந்திரன்
வாரத்தின் கடைசி வணிக தினமான இன்று பிப் 9, வெள்ளியன்று, இந்திய பங்குசந்தைகள் மீண்டும் சரிவைச் சந்தித்தன. இன்று மாலை வணிக நிறைவின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 407 புள்ளிகள் இறக்கம் கண்டு, 34,005 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 122 புள்ளிகள் சரிந்து 10,454 என்ற நிலையிலும் ஓய்ந்தன. இந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1060 புள்ளிகளை இழந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவுப் போக்கின் நிழல் தவிர, இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று வரும் தகவல்களால் கவலை தலை தூக்குவதும் சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுதவிர, தேர்ந்தெடுத்த துறைகளில் இன்று ஏற்றத்தைக் காண முடிந்தது.
உதாரணமாக, சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை திரும்பப் பெற இந்திய அரசு திட்டமிடுவதாக கசியும் தகவலையொட்டி, இன்றைய சந்தையில் சர்க்கரைத் துறை பங்குகளின் விலை பரவலான ஏற்றத்தைக் கண்டன. மருந்துப் பொருள் நிறுவனப் பங்குகள் அதிக அளவில் சரிவு கண்டன. கட்டுமானம், வாகன உற்பத்தித் துறை பங்குகளில் இப்போது நம்பிக்கை குறைந்திருப்பதாக தெரிகிறது.
அடுத்து மீண்டும் திங்களன்று காலை தொடங்கும் சந்தையில் நிச்சயமற்றத்தன்மைதான் ஆட்சி செய்யும். அதனால், இன்னும் சரிவுக்கு இடமும், வாய்ப்பும் உள்ளது என்பதே நிபுணர்களின் கருத்து.
Key words :
முக்கிய சொற்கள் :