/indian-express-tamil/media/media_files/2025/09/01/how-to-become-a-millionaire-2025-09-01-19-00-54.jpg)
ரூ.4,200 சம்பளம் முதல் ரூ.1 கோடி சேமிப்பு வரை... 10-ம் வகுப்பு மட்டுமே படித்த பெங்களூருவாசியின் கதை!
பெரிய வேலை, அதிக சம்பளம், ஆடம்பரமான வாழ்க்கை... இவை இல்லாமல் கோடீஸ்வரன் ஆக முடியுமா? பெங்களூருவைச் சேர்ந்த 53 வயது புரூஃப் ரீடர் ஒருவர், தனது எளிமையான வாழ்க்கை முறை மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேமித்து, நிதியுலகில் பலருக்கும் புதிய வழியைக் காட்டியுள்ளார். அவரது நம்பமுடியாத கதை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
27 வயதில், வெறும் ரூ.5,000 பணத்துடன் சிறிய கிராமத்தில் இருந்து பெங்களூருவுக்குப் புலம்பெயர்ந்த இவர், தனது நிதிப் பயணத்தைப் பற்றி ரெடிட் தளத்தில் மனம் திறந்துள்ளார். அவருக்கு இன்று வரை எந்தக் கடனும் இல்லை. கிரெடிட் கார்டு பயன்படுத்தியதில்லை, ஒருபோதும் கடன் வாங்கியதில்லை. வங்கிகளில் ரூ.1.01 கோடி வைப்புத்தொகை, ரூ.65,000 பங்குகள் என அவரது சேமிப்பு பட்டியல் ஆச்சரியப்படுத்துகிறது.
ரூ.63,000 சம்பளத்தில் கோடீஸ்வரன் ஆனது எப்படி?
மாதச் சம்பளம் வெறும் ரூ.4,200-ல் ஆரம்பித்தது. ஓய்வுபெறுவதற்கு முன் அவரது அதிகபட்ச சம்பளம் ரூ.63,000. ஒரே ஒரு புரூஃப் ரீடர் வேலையை மட்டும் செய்து, எப்படி இவ்வளவு சேமித்தார்? அவரது ரகசியம், ஆடம்பரமற்ற வாழ்க்கை மற்றும் ஒழுக்கம். உடல்நலக்குறைவு காரணமாக, கொரோனா பரவலுக்கு முன் வேலையை விட்டுவிட்டார். அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை: "உச்சத்தில் இருக்கும்போதே விலக வேண்டும்" என்பதுதான்.
மாதம் ரூ.60,000 வருமானம் ஆனால் செலவு ரூ.25,000 மட்டுமே
இன்று அவருக்கு வங்கிகளில் உள்ள வைப்பு நிதிகள் மூலம் மாதத்திற்கு ரூ.60,000 வட்டி வருமானம் கிடைக்கிறது. ஆனால், அவரது குடும்பத்தின் மாதச் செலவு வெறும் ரூ.25,000 மட்டும்தான்! மனைவி, மகள் என மூவர் கொண்ட குடும்பம், பெங்களூருவின் புறநகரில் ரூ.6,500 வாடகையில் எளிமையான வீட்டில் வாழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் வெறும் 4 முறை மட்டுமே வீடு மாறியுள்ளனர். "வீட்டு உரிமையாளர்கள் நான் கஷ்டப்படுவதாக நினைக்கிறார்கள், ஆனால் நான் கடன் வாங்குவதில்லை, கொடுப்பதும் இல்லை" என்று அவர் பெருமையாகக் கூறுகிறார். இந்த எளிமைதான் அவருக்கு நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றுத்தந்துள்ளது.
இவர்தான் உண்மையான பணக்காரர்
பணம் மட்டுமின்றி, ஆரோக்கியத்திலும் அவர் கவனமாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் தனது ஸ்கூட்டரை விற்றுவிட்டு, நடந்து செல்வதையே விரும்புகிறார். குறைந்த பார்வை இருந்தாலும், தண்ணீர் அருந்தாமல் 5 கி.மீ தூரம் ஓடுவார். தனது வெற்றிக்கு அதிர்ஷ்டம் காரணமல்ல, ஒழுக்கம்தான் காரணம் என்று அவர் கூறுகிறார். முறையான கல்வி இல்லாவிட்டாலும், சுயமாக ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஒரு தொழிலை உருவாக்கியது அவரது விடாமுயற்சியைக் காட்டுகிறது. அவரது அறிவுரை மிக எளிமையானது: "கல்வி, அறிவு, ஆரோக்கியம், நேரம், பொறுமை, ஒழுக்கம் - இவைதான் மிகப்பெரிய சொத்துக்கள்."
உண்மையான நிதி சுதந்திரம் என்பது ஆடம்பரமான வாழ்க்கையில் இல்லை, மாறாக "போதும்" என்ற மன நிறைவும், உறுதியான பழக்கவழக்கங்களும்தான் என்பதை இந்த மனிதரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.