/indian-express-tamil/media/media_files/2025/07/27/mehul-choks-2025-07-27-15-10-17.jpg)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,500 கோடி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி மெஹுல் சோக்சி, தன்னை "தப்பியோடிய பொருளாதார குற்றவாளி" (FEO) என்று அறிவிக்க கோரும் அமலாக்க துறையின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) சிறப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவர் நிரவ் மோடியின் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட மெஹுல் சோக்சி தற்போது அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை மற்றும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நாடு கடத்தல் கோரிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். சோக்சி தனது வழக்கறிஞர் விஜய் அகர்வால் மூலம், தன்னை தப்பியோடியவர் என்று அறிவிப்பது தவறானது என்று வாதிட்டுள்ளார்.
"இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் கைது செய்யப்பட்டு, இந்திய வழக்குகளின் காரணமாக காவலில் இருக்கும் ஒருவரை எப்படி தப்பியோடியவர் என்று கருத முடியும்?" என்று அகர்வால் கேள்வி எழுப்பினார்.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், ஒருவர் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் விளக்கினார். ஒன்று, வழக்கு விசாரணையை தவிர்க்க இந்தியாவை விட்டு வெளியேறுவது; மற்றொன்று, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள இங்கு திரும்புவதற்கு மறுப்பது.
"எனது கட்சிக்காரரின் விஷயத்தில், இரண்டு அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்படவில்லை" என்று அகர்வால் கூறினார். "அவர் மருத்துவ சிகிச்சைக்காக நியூயார்க் சென்றபோது, மும்பை காவல்துறையினரின் உரிய அனுமதி இருந்தது. மேலும் அந்த நேரத்தில் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவர் வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக தப்பி சென்றார் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் திரும்புவதற்கு மறுத்ததாக கூறப்படுவது குறித்து, 2021 ஆம் ஆண்டில் டொமினிகன் நீதிமன்ற உத்தரவை அகர்வால் சுட்டிக்காட்டினார். சோக்சி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு முயற்சிக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு அவரை ஆன்டிகுவாவை விட்டு வெளியேற தடை விதித்தது. இது சி.பி.ஐ-யின் முன்னிலையில் பிறப்பிக்கப்பட்டது. இது இந்திய அரசிற்கு தெரிந்தே விதிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாடு என்பதை உணர்த்துகிறது என்று வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மும்பை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்று அகர்வால் தெரிவித்தார். "இப்போது எனது கட்சிக்காரர் இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு, இந்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறையில் காவலில் உள்ளார்" என்று அவர் கூறினார்.
மெஹுல் சோக்சி ஒரே நேரத்தில் பெல்ஜியத்திலும் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். பெல்ஜிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய மனுவில், தனது கைது பெல்ஜிய சட்ட நடைமுறைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறியதாக சோக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
பெல்ஜிய அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றத் தவறிவிட்டனர் என்றும், சோக்சிக்கான அடிப்படை சட்ட பாதுகாப்புகளை மீறியுள்ளனர் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சோக்சிக்கு பிணை மறுத்ததைத் தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அடுத்த விசாரணையை, நீதிமன்றம் இன்னும் திட்டமிடவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.