/indian-express-tamil/media/media_files/2025/08/18/10-lakhs-car-2025-08-18-21-12-33.jpg)
பலேனோ முதல் டாடா பஞ்ச் வரை... மைலேஜ், பாதுகாப்பு, பட்ஜெட்; டாப் 5 ஃபேமிலி கார்கள்!
இந்தியாவில் குடும்ப கார் வாங்குவது என்பது விலை, மைலேஜ், பராமரிப்புச் செலவுகள், பாதுகாப்பு மற்றும் நடைமுறை பயன்பாடு போன்ற பல அம்சங்களைச் சார்ந்தது. குறிப்பாக, ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் காரை கண்டறிவது சவாலான காரியம். ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் மிகப் பிரபலமான மற்றும் நம்பகமான 6 கார்களைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மாருதி சுசுகி பலேனோ (Baleno)
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ, நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற குடும்ப காராகத் திகழ்கிறது. இதன் விலை ரூ.6.75 லட்சம் முதல் தொடங்குகிறது. என்ஜின் மற்றும் மைலேஜ், இது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இதன் சராசரி மைலேஜ் சுமார் 22 கி.மீ/லி. இது நகர்ப்புறப் பயணங்களுக்கு மிகச் சிறந்த எரிபொருள் சேமிப்பை வழங்குகிறது.
விசாலமான கேபின் மற்றும் பெரிய பூட் ஸ்பேஸ், பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கிறது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற ஏசிவென்ட் போன்ற நவீன வசதிகளும் இதில் உள்ளன. இரட்டை ஏர்பேக்குகள் (dual airbags), ஏபிஎஸ் (ABS) போன்ற பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. நகருக்குள் தினமும் பயணம் செய்பவர்கள், எளிதான பராமரிப்பு, சிறந்த நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு பலேனோ சிறந்த தேர்வாகும்.
2. மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR)
வேகன்ஆர், அதன் தனித்துவமான 'டால் பாய்' வடிவமைப்பிற்காக அறியப்படுகிறது. இதன் விலை ரூ. 5.52 லட்சம் முதல் ரூ. 7.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இது குடும்பங்களுக்கு ஏற்ற கார். இதன் முக்கிய பலம் அதன் மைலேஜ். மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் 25.19 கி.மீ/லி மைலேஜும், ஆட்டோமேடிக் மாடல் 24.43 கி.மீ/லி மைலேஜும் தருகிறது. உயரம் அதிகமாக இருப்பதால், கேபினில் அதிக இடவசதி உள்ளது. உயரமான பயணிகளுக்கும் இது சௌகரியமாக இருக்கும். மாருதி சுஸுகியின் பரந்து விரிந்த சேவை நெட்வொர்க் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு காரணமாக, இது பட்ஜெட் வாடிக்கையாளர்களின் விருப்பமாக உள்ளது.
3. ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)
ஐ20 ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் கார். இதன் கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன. பவர்ட்ரெயின் விருப்பங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 20 கி.மீ/லி மைலேஜும், டீசல் மாடல் 21 கி.மீ/லி மைலேஜும் தருகிறது. இதன் விலை ரூ. 7.04 லட்சம் முதல் ரூ. 11.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பல பிரீமியம் அம்சங்கள் இதில் உள்ளன. ஸ்போர்ட்டி மற்றும் நவீன வடிவமைப்பு, இளம் தலைமுறையினரை ஈர்க்கிறது.
4. டாடா அல்ட்ரோஸ் (Tata Altroz)
டாடா நிறுவனத்தின் அல்ட்ரோஸ், பாதுகாப்பு மற்றும் உறுதியான கட்டமைப்பிற்காக அறியப்படுகிறது. குளோபல் NCAP-ல் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்றது இதன் மிகப்பெரிய பலம். இது பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்கிறது. பெட்ரோல் மாடல் 18.05 கி.மீ/லி மைலேஜும், டீசல் மாடல் 23.64 கி.மீ/லி மைலேஜும் வழங்குகிறது. டீசல் மாடலின் மைலேஜ் மிகவும் சிறப்பாக உள்ளது. அல்ட்ரோஸ் ஒரு ஸ்டைலிஷான மற்றும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 6.65 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இது சாலைகளில் தனித்துத் தெரிகிறது.
5. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire)
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் செடான் மாடல்களில் டிசையர் முன்னணியில் உள்ளது. இதன் விலை ரூ. 6.57 லட்சம் முதல் ரூ. 9.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. சிறந்த மைலேஜ் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார், 26 கி.மீ/லி என்ற மிகச் சிறந்த மைலேஜை வழங்குகிறது. இது செடான் கார் என்பதால், ஹேட்ச்பேக் கார்களை விட அதிக பூட் ஸ்பேஸ் மற்றும் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. மாருதி நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் நீண்ட ஆயுள் இதற்கு பெரிய பலம்.
6. டாடா பஞ்ச் (Tata Punch)
டாடா நெக்ஸானை பின்பற்றி, அதனை காட்டிலும் அளவில் சிறியதான காரை உருவாக்கும் முயற்சியில் விற்பனைக்கு வந்தது பஞ்ச் ஆகும். இதனால், நெக்ஸானை போல் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற காராக பஞ்ச் விளங்குகிறது. குறைந்த விலையில் பாதுகாப்பான காரை வாங்க விரும்புபவர்களுக்கு பஞ்ச் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்தக் கார்கள் அனைத்தும் அவற்றின் விலை மற்றும் மைலேஜ் திறன்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன. ஒரு காரை வாங்கும் முன், அதன் மைலேஜ் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்தது. உங்கள் பட்ஜெட், மைலேஜ் எதிர்பார்ப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.