ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்பவர்களின் சேவை நிறுத்தப்படுமா? குழப்பத்தில் பொதுமக்கள்!

ரீசார்ஜ் கடைகளில் 35 ரூபாய்க்கு கீழ் எந்த ஒரு ரீசார்ஜ் சேவைகளும் செய்யப்படுவதில்லை 

மாதந்தோறும் ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் டெலிகாம் சேவை விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் :

ஸ்மார்ட்ஃபோன் தொடங்கி  பட்டன் போன் வைத்திருக்கும் அனைவரும் தங்களுக்கு தேவைப்படும் போது ரீசார்ஜ்  செய்வதை  பழக்கமாக வைத்திருக்கின்றனர். திடீரென்று  போன் செய்ய வேண்டும் என்றால் அருகில் உள்ள ரீசார்ஜ் கடைகளில் ரூ. 10, 20, 30 என ரீசார்ஜ் செய்துக் கொள்வார்கள்.

ஆனால் இனிமேல் ப்ரீபெய்ர் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ்  செய்தால், அவர்களின் இன்கமிங் சேவை நிறுத்தப்படும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தன.

இந்த அறிவிப்பு  வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுத் தொடர்பாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்குப் புகார்கள் குவிய ஆரம்பித்தன.

இதுக் குறித்து விளக்கமளித்த டெலிகாம் நிறுவனங்கள்சமீபகாலமாக ஏற்பட்டு வரும் நஷ்டத்தைச் சமாளிக்க ஏதுவாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறின.

இது குறித்து விசாரணை நடத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ள மினிமம் ரீசார்ஜ் திட்டத்துக்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து பேசிய டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, “நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் டிராய் தலையிடுவது கிடையாது. அதேநேரம் மினிமம் ரீசார்ஜ் எனக் கூறி வாடிக்கையாளர்களின் சேவை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மினிமம் ரீசார்ஜ் செய்யவில்லை என்பதற்காக வாடிக்கையாளர்களின் சேவைகளை நிறுவனங்கள் தடை செய்யக்கூடாது.சேவை நிறுத்தம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ரீசார்ஜ் கடைகளில் 35 ரூபாய்க்கு கீழ் எந்த ஒரு ரீசார்ஜ் சேவைகளும் செய்யப்படுவதில்லை

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close