தங்களது நாட்டில் தொழில் தொடங்குபவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் வழங்கப்படும் என மொரிசியஸ் உயர் கமிஷனர் தெரிவித்துள்ளார். தொழில் வாய்ப்புகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
மொரீஷியஸ்சின் கவுரவ இந்திய வர்த்தக ஆணையாளராக நேரு கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் பி.கிருஷ்ணதாஸ் உள்ளார்.
அவரது ஏற்பாட்டின் பேரில் மொரீஷியஸ்சில் தொழில் தொடங்குவதற்காக கோவை தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.
மொரீஷியஸ் முன்னாள் மந்திரியும், உயர் கமிஷனருமான முகேஸ்வர் சூனி மற்றும் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிப் இக்பால் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 100-க்கும் மேலான தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.
மொரீசியஸ் உயர் கமிஷனர் முகேஸ்வர் சூனி நிருபர்களிடம் கூறியதாவது, "வரி விகிதம் குறைவு
70 சதவீதம் இந்திய பூர்வீக குடிமக்களை கொண்ட மொரீசியஸ் அமைதிக்கான ஆசியாவின் சிறந்த நாடாகவும், சுற்றுலாதுறையில் மேம்பட்டு வரும் நாடாகவும் விளங்கி வருகிறது.
இந்தியாவுடன் மிகவும் நட்புறவுடன் உள்ளோம். இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் 315 பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். 615 பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
மொரீஷியஸ்சில் வரிவிகிதம் மிகவும் குறைவு ஆகும். வருமான வரி 0 முதல் 20 சதவீதத்துக்குள் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. என்ஜினீயரிங், உற்பத்தி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இங்க முதலீடு செய்யலாம்.
தொழில் தொடங்குபவர்களுக்கு 24 மணிநேரத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படும். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அங்கிருந்து உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது வரிவிகிதம் குறைவாக இருக்கும்.
சினிமா தயாரிப்புக்கும் அங்கு அதிக வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. எனவே கோவை தொழில் முனைவோர்கள் மொரீஷியஸ்சில் தொழில் தொடங்கினால் அனைத்து வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிப் இக்பால் கூறியதாவது, பிரதமர் மோடி இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மொரீஷியஸ்சில் தொழில் தொடங்குபவர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். மொரீஷியஸ் கவுரவ இந்திய வர்த்தக ஆணையாளர் பி.கிருஷ்ணதாஸ் கூறியதாவது, தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் முனைவோர்கள் உள்ளனர்.
தொழில் வளர்ச்சிக்காகவும், தொழில்முனைவோர்களின் நன்மைக்காகவும் இந்த வர்த்தக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மொரீஷியஸ்சில் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் தொழில் வாய்ப்புகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது. நேரு கல்வி குழும தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜே ஷ் லந்த் மற்றும் தொழில்முனைவோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்