என்.பி.எஸ் என அறியப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து உங்களது ஓய்வூதியத் தொகையின் ஒரு பகுதியை, முறையான காரணங்களுக்காக பெற்றுக் கொள்ளலாம் என தேசிய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவசரநிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக ஓய்வூதிய நிதியை எடுப்பதற்கு ஊக்குவிக்க கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓய்வூதிய திட்ட முதலீட்டிலிருந்து ஒரு பகுதியை அவசரகால நிதியாக பெறுவது சாத்தியம் என்றாலும், ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, மூன்றாண்டுகள் கழித்தே அவசரகால நிதியை பெறமுடியும். ஓய்வூதிய திட்டத்தில் முதிர்வு காலம் வரும் முன்னர், 3 முறை மட்டுமே அவசர கால நிதியை பெற முடியும். ஒவ்வொரு அவசரகால பெறுதல்களுக்கும் இடையில், குறைந்தது ஐந்தாண்டுகள் இடைவெளி அவசியமாகிறது. ஆனால், சிறப்பான மருத்துவ தேவைகளுக்கு இந்த விதி பொருந்தாது.
இத்திட்டத்தின் மூலம், ஓய்வூதிய திட்ட பயனாளர், தனது முதலீட்டு தொகையில் இருந்து 25% நிதியை மட்டுமே அவசரகால நிதியாக பெற முடியும். உதாரணமாக, ஓய்வூதிய முதலீட்டு தொகையாக நீங்கள் 6 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் எனில், 1.5 லட்சம் ரூபாயை மட்டுமே அவசர கால நிதியாக பெற முடியும்.
முன்னர் இருந்த விதிகளின் படி, ஓய்வூதிய திட்டத்திலிருந்து அவசரகால நிதியை பெற இயலாது. ஆனால், இப்போது, சிறப்புத் தேவைகளான குழந்தைகளின் திருமணம், கல்வி, மருத்துவச் செலவுகள் முதலியவற்றுக்காக அவசரகால நிதியை பெற்றுக் கொள்ளலாம்.
ஓய்வூதிய திட்டத்தில் அவசரகால நிதியை பெறுவதற்கு விண்ணப்பங்களை எந்த அலுவலகத்திலும் சமர்பித்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட விண்ணப்பத்தை, பயனாளரின் சுய மதிப்பீட்டுக் கடிதத்துடன் ஆன்லைனில் சமர்பித்தால், அடுத்த ஐந்து நாள்களில் அவசரகால நிதியை பெற்றுக் கொள்ளலாம்.