/indian-express-tamil/media/media_files/2025/09/12/gst-rate-cuts-india-2025-09-12-08-28-23.jpg)
GST price reduction
நாடு முழுவதும் இன்று முதல் (செப்டம்பர் 22) புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த புதிய வரி சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்திருந்தாலும், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மற்றும் பெரிய பலசரக்குக் கடைகள் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றன.
இது தொடர்பாக ஈரோட்டில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர் கணேசன் தந்தி செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”நேற்று இரவு வரைக்கும் பழைய முறைப்படிதான் வரிவிதிப்பு இருந்தது. இன்று காலை கடையைத் திறக்கும்போது அனைத்துப் பொருட்களுக்கும் புதிய வரி விகிதத்தை மாற்ற வேண்டியிருந்தது. இதற்கான போதிய நேரம் கிடைக்காததால், இரவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருந்தது.
புதிய வரி விதிப்பு குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் குழப்பமடைகின்றனர். புதிய விலைக்கும் பழைய விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறித்து அடிக்கடி கேள்விகள் கேட்கின்றனர்.
ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் பொருட்களுக்கு எவ்வளவு வரி குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை சாஃப்ட்வேர் வாயிலாக அப்டேட் செய்துள்ளனர். இருப்பினும், பலசரக்குக் கடைகளில் 0% முதல் 40% வரை பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், அவற்றை மெனுவல்லாக (Manual) மாற்றுவது கடினமாக உள்ளது" என்றார் கணேசன்.
புதிய வரி விதிப்பின்படி, உணவுப் பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்நாக்ஸ், நூடுல்ஸ், பாஸ்தா, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களுக்கான வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பல பால் பொருட்கள் 0% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பழைய விலையுடன் புதிய விலை:
"வாடிக்கையாளர்கள் குழப்பமடையாமல் இருக்க, பழைய விலைக்கும் புதிய விலைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி, அதை ஸ்டிக்கராக ஒட்டி வருகிறோம். இதன் காரணமாக, ஒரு மாதத்திற்குள் இந்த நடைமுறை முழுமையாகச் சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார் கணேசன்.
புதிய வரி சீர்திருத்தம் பொதுமக்களுக்குப் பயனளிப்பதாக இருந்தாலும், வர்த்தகர்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.