இந்திய ரிசர்வ் வங்கி தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின்(NACH) விதிகளை மாற்றியுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் வங்கி சேவைகள் செயல்படும். இது ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த புதிய விதிகளின்படி, மாத சம்பளம் , ஓய்வூதியம் மற்றும் இஎம்ஐ கட்டணங்கள் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை. உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும். சம்பள நாள் வார இறுதி நட்களிலும் வருவது வழக்கம். இதனால், தற்போது மாத சம்பளம் பெறுவோர் சம்பளக் கணக்கில் வரவுக்காக திங்கள் கிழமை வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் ஜூன் மாத கடன் கொள்கை மறுஆய்வின் போது, வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்கும், 24 மணி நேரமும் RTGS நன்மைகளைப் பெறுவதற்கும், தற்போது வங்கி வேலை நாட்களில் மட்டும் இயக்கத்தில் உள்ள NACH, இனி வாரம் முழுவதும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
தேசிய பரிவர்த்தனைக் கழகத்தால் இயக்கப்படும் பரிவர்த்தனை அமைப்புதான் National Automated Clearing House (NACH). மாதச் சம்பளம், பென்சன், வட்டி, டிவிடெண்ட் உள்ளிட்டவற்றை ஒரு நிறுவனத்தில் இருந்து பலருக்கு அனுப்ப இந்த அமைப்பு உதவுகிறது. மேலும் மின் கட்டணம், கேஸ் கட்டணம், டெலிபோன் பில், கடன் தவணை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம் போன்றவற்றுக்கும் இந்த அமைப்பு உதவுகிறது. இதுவரை வங்கிகள் இயங்கும் நாட்களில் மட்டுமே NACH செயல்பட்டு வந்தது. ஆனால் இனி அனைத்து வசதிகளையும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் ஏடிஎம் விதிகளிலும் ஆர்பிஐ பெரிய மாற்றங்களை செய்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் வங்கிகள் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணம் ரூ .2 அதிகரிக்கும். ஜூன் மாதத்தில், மத்திய வங்கி பரிமாற்றக் கட்டணத்தை ரூ .15 லிருந்து ரூ .17 ஆக உயர்த்தியது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ .5 முதல் ரூ .6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
NACH பயனாளிகளுக்கான நேரடி மற்றும் பயனுள்ள டிஜிட்டல் பயன்முறையின் பிரபலமான மற்றும் முக்கிய டிஜிட்டல் முறையாக உருவெடுத்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது, கொரோனா தொற்று பரவலால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் காலத்தில், அரசு மானியங்களை பயனாளிகள் உரிய காலத்தில் பெறுவதற்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil