/indian-express-tamil/media/media_files/2025/04/24/7PifMqYhWf5EBfvZjNaL.jpg)
ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலையில் ஆடம்பர பொருட்கள்: இனி 1% கூடுதல் வரி விதிப்பு!
ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை உள்ள பொருட்களை வாங்கும்போது, டி.சி.எஸ். எனப்படும் விற்பனையின்போதே வசூலிக்கப்படும் வரி 1% விதிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஏப்.22 முதல் இது அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் விலையுள்ள ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரம், சிற்பங்கள், காலணிகள், ஓவியங்கள், பழங்கால பொருட்கள் போன்ற கலைப் பொருட்கள், நாணயங்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள், சன்கிளாஸ், ஹோம் தியேட்டர் அமைப்புகள் உள்ளிட்ட பொருட்களுக்கு இனி 1% டி.சி.எஸ்., வசூலிக்கப்படும். இந்த வரியை விற்பனையின்போது, நிறுவனமே வசூலித்து வருமான வரித் துறையிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
அதிக சொத்து மதிப்பு உடைய தனி நபர்கள், இது போன்ற ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்வது அதிகரித்து வருவதால், இந்த வரியை அறிமுகப்படுத்துவதாக, கடந்தாண்டு பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். 2025 ஜன.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தாலும், தற்போதுதான் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகி உள்ளது. எனவே, ஏப்ரல் 22-க்கு முன்னதாக வாங்கிய பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது.
ஆடம்பர பொருட்களை வாங்கும் நபர்கள், பெரும்பாலும் ரொக்க பரிவர்த்தனையே மேற்கொள்வதால், வருமான வரித்துறையால் கண்காணிக்க முடியாமல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது டி.சி.எஸ்., விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனையாளர் வசூலிக்கும் வரியை, வாங்குபவர்களின் பான் கார்டு எண்ணை குறிப்பிட்டு, வருமான வரித் துறையிடம் டிபாசிட் செய்ய வேண்டும். வருமான கணக்கு தாக்கல் செய்யும்போது, இனி வருமானத்தை குறைவாக காண்பித்து ஏமாற்ற முடியாது. ஏனென்றால், வருமானம் குறைவாக இருக்கும்போது எப்படி ஆடம்பர பொருட்களை வாங்க முடிந்தது என்ற கேள்வி எழும்.
இவ்வாறு செலுத்தப்படும் வரியை, கணக்கு தாக்கலின்போது செலுத்த வேண்டிய வரியை விட, டி.சி.எஸ்., வசூலிக்கப்பட்ட தொகை அதிகமாக இருந்தால், அதைக் குறிப்பிட்டு ரீபண்டு பெறலாம். கணக்கில் காட்டப்படாத ரொக்க பரிவர்த்தனைகளை தடுக்கவும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், வருமான வரி வசூலை அதிகரிக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.